

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும் இணைந்து சாதி அடையாளங்களை அழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி மானூர் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட தெற்குபட்டி, சீதக்குறிச்சி, இரண்டும் சொல்லான், கட்டாரங்குளம், எட்டான்குளம், களக்குடி, திருமலாபுரம், மடத்தூர் பகுதிகளில் 112 மின் கம்பங்கள், 3 நீர்தேக்க தொட்டிகள், 5 பாலங்கள், 1 மரம், 2 பேருந்து நிறுத்தம், 1 கிணறு, 1 குடி தண்ணீர் குழாய் ஆகிய இடங்களிலும்,
சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட சுத்தமல்லி, சங்கன்திரடு, நரசிங்க நல்லூர், பட்டன் கல்லூர் பகுதிகளில் 30 மின் கம்பங்களிலும், பத்தமடை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பத்தமடை பிள்ளையார் கோவில் தெரு, மங்கையர்க்கரசி தெரு பகுதியில் 33 மின் கம்பங்களிலும்,
மூலக்கரைப்பட்டி காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட முனைஞ்சிப் பட்டி பகுதியில் 5 மின் கம்பங்களிலும் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து சாதிய அடையாளங்களை வண்ணம் பூசி அழித்தனர். இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். சிலம்பரசன் நேரில் பார்வையிட்டார்.