Published : 22 Oct 2023 04:02 AM
Last Updated : 22 Oct 2023 04:02 AM
வேலூர் / திருப்பத்தூர் / ராணிப்பேட்டை / திருவண்ணாமலை: ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உயிர் நீத்த காவலர்களுக்கான வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில், துப்பாக்கி குண்டுகள் முழங்க உயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
சீன ராணுவத்தினர் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக்கின் ஹாட் ஸ்பிரிங் பகுதியில் மறைந்திருந்து நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர். எல்லையை காக்கும் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உயிர் தியாகத்தை நினைவு கூரும் வகையில் நாடு முழுவதும் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, வேலூர் மாவட்ட காவல் துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சி வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவு தூணுக்கு வேலூர் சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் பாஸ்கரன், கோடீஸ்வரன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் திருநாவுக்கரசு, பழனி, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய் வாளர்கள் உட்பட திரளான காவலர்களும் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, வானத்தை நோக்கி 16 துப்பாக்கி குண்டுகள் முழங்கி காவல் துறை யினர் அஞ்சலி செலுத்தினர்.
திருப்பத்தூர்: இதேபோல, திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்க நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் முத்துமாணிக்கம், புஷ்பராஜ், ரவீந்திரன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் செந்தில்,
விஜயகுமார், விநாயகம், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ரஜினி, உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உயிர் நீத்த காவலர்களின் நினைவு சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து, 63 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதா னத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் வரய்யா காவலர் நினைவு சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ( இணைய வழி குற்றப் பிரிவு ) குமார், துணை காவல் கண்காணிப்பாளர்கள் பிரபு, ரவிச்சந்திரன்,
ராஜாசுந்தர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சுரேஷ், பார்த்த சாரதி மற்றும் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் உறவினர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஆயுதப் படையை சேர்ந்த காவலர்கள் 63 குண்டுகள் முழங்கி மரியாதை செலுத்தினர்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் காவலர்கள் நினைவு சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார். இதையடுத்து காவலர் வீர வணக்க நாள் உறுதி மொழி ஏற்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், காவல் துறை அதிகாரிகள், காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT