

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக அவ்வப்போது மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது.
விட்டு விட்டு மழை பெய்து வந்த காரணத்தினால் வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 12 வயது சிறுமி உட்பட மொத்தம் 8 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் கடந்த இரண்டு நாட்களில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இந்த பகுதியில் சுகாதாரத் துறையினர் முறையான பணிகளை சரிவர மேற்கொள்ளாததும் டெங்கு காய்ச்சல் பரவ காரணமாக உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தொடர்ந்து, தொற்று பாதித்த பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சுகாதாரத் துறையினர் சார்பில் பரிசோதனை மற்றும் தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. விளாப்பாக்கம் பகுதியில் மட்டும் கடந்த 2 நாட்களில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.