சேலத்தில் நவம்பர் 22 முதல் 12 நாட்களுக்கு புத்தகத் திருவிழா: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சேலத்தில் நவம்பர் 22 முதல் 12 நாட்களுக்கு புத்தகத் திருவிழா: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
Updated on
1 min read

சேலம்: சேலம் மாவட்ட புத்தகத் திருவிழா, நவம்பர் 22-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை, 12 நாட்களுக்கு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது என்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்து, அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் வகையில், புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு, மாவட்டங்களில் புதிய நூலகங்கள் அமைத்தல், அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தகத் திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அதேபோன்று, இந்த ஆண்டு சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேலம் புத்தகத் திருவிழா - 2023 வரும் நவம்பர் 22-ம் தேதி தொடங்கி டிசம்பர் 3-ம் தேதி வரை, 12 நாட்களுக்கு, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெறவுள்ளது.

சேலத்தில் நடைபெறவுள்ள இப்புத்தக திருவிழாவில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறவும், கலை மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சேலம் மாவட்ட பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்திடவும், மாணவர்களுக்கு பயன்படும் மின் நூல் மற்றும் மின் பொருண்மை பதிப்பாளார்களின் படைப்புகளைக் கொண்ட விற்பனையகங்கள் அமைத்திடவும், அரிய வகை புத்தகங்கள் காட்சிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

வாசிப்பு அரங்கங்கள், பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி வாசிப்பு அரங்கம், ஒளி, ஒலி அமைப்புடன் கூடிய அரங்கங்கள், புத்தகத் திருவிழாவின் அனைத்து நாட்களிலும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்கம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நூல் விற்பனையகங்கள் அனைத்தும் புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் அதன் கருப்பொருள் அடிப்படையில் வரிசைப்படுத்தி அமையும் வகையில் அரங்குகள் அமைக்கப்படுகிறது.

முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இப்புத்தகத் திருவிழாவில் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் இலக்கியம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், அரங்குகளில் சேலம் மாவட்ட எழுத்தாளர்களின் படைப்புகளை காட்சிப்படுத்தி, அப்படைப்புகள் சார்ந்த உரையாடல் நடைபெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவில், 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. சேலத்தில் நடைபெறவுள்ள இம்மாபெரும் புத்தகத் திருவிழாவில், புத்தக ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையிலான புத்தகங்கள் இடம்பெற உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in