Published : 22 Jan 2018 09:31 AM
Last Updated : 22 Jan 2018 09:31 AM

தமிழக உரிமைகளை ஜெ. விட்டுக்கொடுத்ததில்லை: திருப்பூரில் திமுக எம்.பி. கனிமொழி கருத்து

ஜெயலலிதாவோடு மாறுபட்ட கருத்து இருந்தாலும், பல நேரங்களில் தமிழகத்தின் உரிமையை அவர் விட்டுக்கொடுத்ததில்லை என கனிமொழி எம்.பி. கூறினார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில், நேற்று முன் தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. திமுக வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் சரஸ்வதி பால்ராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் மாநில மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை திமுக குழுத் தலைவருமான கனிமொழி பேசியதாவது:

2-ஜி அலைக்கற்றை வழக்கு பொய்யாக புனையப்பட்ட வழக்கு. பொய்யான வழக்கில் குற்றத்தை நிரூபிக்க முடியாததால், நீதிபதி எங்களை விடுதலை செய்தார்.

தமிழகம் தற்போது அதலபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நகைச்சுவை ஆட்சி நடக்கிறது. ஜெயலலிதாவோடு மாறுபட்ட கருத்து இருந்தாலும், பல நேரங்களில் தமிழகத்தின் உரிமையை அவர் விட்டுக்கொடுத்தது இல்லை. ஆனால் இன்று ஆட்சியில் இருப்பவர்கள் தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் தாரைவார்த்து கொடுக்கிறார்கள்.

67 சதவிவீதம் பேருந்து கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். பல தவறுகளை இவர்கள் செய்துகொண்டு மக்கள் மீது சுமையை சுமத்தி இருக்கிறார்கள். ஜி.எஸ்.டி., பண மதிப்பு நீக்கம் ஆகிய நடவடிக்கைகளால் பல தொழிற்சாலைகள் இன்றைக்கும் திருப்பூரில் மூடக்கூடிய சூழல் உருவாகி வருகிறது. நாம் யார் என புரிந்து கொண்டால் தான், அது தமிழகத்துக்கான விடியலாக இருக்கும் என்றார்.

முன்னதாக டெல்லியில் மர்மமான முறையில் இறந்த திருப்பூர் மருத்துவர் சரத்பிரபுவின் வீட்டில் துக்கம் விசாரித்த கனிமொழி, மருத்துவர் மரணம் தொடர்பாக உரிய நீதி கிடைக்க திமுக தரப்பில் மாநிலங்களவையில் குரல் எழுப்பப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x