

அரூர்: தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் அரூர் பகுதி விவசாயிகள் பழங்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளதால் அழுகி வருகின்றன. தருமபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கடத்தூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் அதிகளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. தொடர்ச்சியாக தக்காளியையே விவசாயிகள் பயிர் செய்துவந்தாலும் தொடர்ந்து நல்ல விலை கிடைப்பதில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்பனையானது. இதனால் ஏராளமான விவசாயிகள் தக்காளி பயிரிடத் தொடங்கினர். இதனால் உற்பத்தி அதிகரித்து விலை சரிந்து விடுகிறது.
இந்நிலையில், தற்போது தக்காளி விலை மீண்டும் சரியத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.20-க்கு விற்ற நிலையில் சில நாட்களாக கிலோ ரூ.10-க்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. 25 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.200-க்கும் குறைவாக விற்பனையாவதால் அறுவடைக் கூலி, சந்தைக்கு கொண்டு செல்லும் வாடகைக்கு கூட கட்டுப்படியாகாத நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனால் பல்வேறு இடங்களில் தக்காளியை அறுவடை செய்யாமல் செடியிலேயே விட்டுள்ளனர்.
இதுகுறித்து தக்காளி விவசாயி குமரேசன் கூறியதாவது: ஏதேனும் ஒரு சமயத்தில் கிடைக்கும் அபரிதமான விலையை நம்பி பயிரிடுவதும், அதன்பின்னர் பெரும் இழப்பை சந்திப்பதும் தக்காளி விவசாயிகளுக்கு வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது.
இதனை போக்கிடும் வகையில் நியாயமான விற்பனை விலை கிடைக்கும் வகையில் தக்காளியை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், விவசாயிகளின் நலன் கருதி தக்காளி விலை குறையும் காலங்களில் அவற்றை பாதுகாத்திட குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும்.
தக்காளியை மதிப்பு கூட்டி ஜாம் தயாரித்திட தொழிற் சாலைகள் அமைத்து, விவசாயி களுக்கும் அது குறித்த தொழில் பயிற்சி அளிக்க வேண்டும். விவசாயிகளின் இக்கோரிக்கையை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும், என்றார்.