

முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக துரைமுருகன் பேசியபோது அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
முல்லை பெரியாறு அணை தொடர்பாக, பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தமிழகத்துக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று அவர் குறிப் பிட்டார்.
அதைத் தொடர்ந்து முதல்வரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து செ.கு.தமிழரன் (இந்திய குடியரசு கட்சி), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), கதிரவன் (பார்வர்டு பிளாக்), எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கட்சி), ராமசாமி (புதிய தமிழகம்), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி), கலையரசன் (பாமக), கோபிநாத் (காங்கிரஸ்), பாலபாரதி (மார்க்சிஸ்ட்), பொன்னுபாண்டி (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் பேசினர்.
அதன்பிறகு திமுக உறுப்பினர் துரைமுருகன் பேசியதாவது:
முல்லை பெரியாறு அணையில் முதல்கட்டமாக 142 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் கூறினார். அது நமக்கு மகிழ்ச்சி அளிப்பதுபோல், தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. குறிப்பாக 5 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைவர். அடுத்தகட்டமாக 152 அடி வரை தண்ணீர் தேக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்காக பொதுமக்கள், விவசாயிகள் உள்பட பலர் போராடி உள்ளனர். அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். இன்றைய முதல்வரைப்போல் எங்கள் கட்சி தலைவரும் இந்தப் பிரச்சினையில் நடவடிக்கைகள் எடுத்தார்.
அப்போது துரைமுருகன் கருத்துக்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பேரவைத் தலைவர் குறுக்கிட்டு, ‘110 வது விதியின்கீழ் வாசித்த அறிக்கை மீது விவாதம் எதுவும் நடத்தக் கூடாது’ என்றார். அதைத் தொடர்ந்து துரைமுருகன் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தேமுதிக துணைத் தலைவர் மோகன்ராஜ் பேசுகையில், “முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் எங்கள் கட்சித் தலைவரும் போராடினார்” என்றார். அதற்கும் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பு உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து, ‘‘முல்லை பெரியாறு விஷ யத்தில் அவர்கள் தலைவரும் போராடியதாக மோகன்ராஜ் கூறினார். உங்கள் தலைவரின் போராட்டத்தை பார்த்து நாடே சிரித் தது’’ என்றார். அதன்பிறகு, மோகன் ராஜ் நன்றி தெரிவித்துவிட்டு அமர்ந்தார்.