

சென்னை: சென்னையைச் சேர்ந்த பிரபல மனநல மருத்துவர் உடுப்பி கௌதம் தாஸுக்கு ‘மகாத்மா’ விருது வழங்கப்பட்டது.
சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் தலைவர்களை சிறப்பிக்கும்வகையில் ‘மகாத்மா’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா புதுடெல்லியில் அண்மையில் நடைபெற்றது. விழாவை ராஜ பிர்லா தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்ஜி உரையாற்றினார்.
விழாவில், சென்னையைச் சேர்ந்த 66 வயதான மனநல மருத்துவர் உடுப்பி கௌதம் தாஸ் உள்ளிட்ட 30 பேருக்கு ‘மகாத்மா’ விருது வழங்கப்பட்டது. விருதுகளை இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ் லூம்பா வழங்கினார்.
மனநல மருத்துவர் உடுப்பி கௌதம் தாஸ் 50 ஆண்டுகளாக மனநலப் பாதுகாப்புக்கான அணுகலை மேம்படுத்துதல், மனநலக்கோளாறுகளை எதிர்த்துப் போராடுதல், மனநலம் குறித்த பொதுக் கல்வியாற்றுதல் மற்றும் பேரழிவு மனநலப்பணி ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர். தீவிர காந்தியவாதியும், சுதந்திரப் போராட்ட வீரருமான அமரர் டாக்டர் நரசிம்ஹ ஆச்சார்யரின் மகன்.
"மகாத்மா விருதைப் பெற்றவர்கள் சாதாரண சாதனையாளர்கள் மட்டுமல்ல, அவர்கள் மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு தீவிரமாக பங்களிக்கும் அசாதாரண மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள். அத்தகைய தலைவர்களை இந்த விருதுஅங்கீகரிக்கிறது" என்று மகாத்மா விருதின் நிறுவனர் அமித் சச்தேவா கூறினார்.
விருது பெற்ற மருத்துவர் கௌதம் தாஸ் பேசும்போது, "தொழுநோய், காசநோய் போன்ற உடல் நோய்களையும், தீண்டாமை போன்ற சமூக சீர்கேடுகளையும் ஒழிப்பதில் உருவகமாக விளங்கும் மகாத்மா காந்தியிடமிருந்து தனக்கு உத்வேகம் உருவாகிறது" என்றார். மகாத்மா விருது, ஆதித்யா பிர்லா குழுமம், ‘எடர்னல் காந்தி இனிஷியேட்டிவ்’ மற்றும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தால் ஆதரிக்கப்படுகிறது.