Published : 21 Oct 2023 06:45 AM
Last Updated : 21 Oct 2023 06:45 AM
சென்னை: ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து லட்சக்கணக்கில் மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று பயணித்தனர்.
சனி, ஞாயிறைத் தொடர்ந்து 23, 24-ம் ஆகிய தேதிகளில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை எனதொடர் விடுமுறைகள் வருகின்றன. இதனால், நேற்று முதலே மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணிக்க திட்டமிட்டனர். அவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 2,265 சிறப்பு பேருந்துகளும், பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய முக்கிய தொழில் நகரங்களிலிருந்து பிற பகுதிகளுக்கு 1,700 சிறப்புப் பேருந்துகளும் நேற்று முதல் இயக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் வாயிலாக பயணிக்க 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், சென்னையில் இருந்துபயணிப்பதற்காக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கோயம்பேடு தவிர்த்து தாம்பரம் மெப்ஸ் மற்றும் பூவிருந்தவல்லி பைபாஸ் பகுதியில் இருந்தும் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதுகுறித்த விவரமும் கோயம்பேடு பேருந்துநிலையத்தில் ஆங்காங்கே பதாகைகள் அமைத்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டன.
திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கும், வேலூர்,ஆரணி, ஓசூர் போன்ற பகுதிகளுக்குச் செல்வோரும் மேற்கூறிய தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து பயணித்தனர்.
இதேபோல், ஆம்னி பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. ஆனால், பேருந்துகளில் அதிககட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டினர். அதேநேரம், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறும்போது, ‘‘போதிய அளவில்கூட்டம் இல்லை. சில பேருந்துகளில் முன்பதிவு முழுமையடையவில்லை’’ என்றனர்.
இதற்கிடையே பயணிகளின் வசதிக்காக, மெட்ரோ ரயில்கள் இரவு 8 முதல் 10 மணி வரை, 9 நிமிட இடைவெளிக்குப் பதில்6 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டன.
ரயில்களில் கூட்டம்: சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம்அதிகமாக இருந்தது. வட மாநிலங்களில் தசரா பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுவதால், அங்கு செல்வதற்கும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம்பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டது. முன்பதிவில்லா பெட்டிகளில் ஏற நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்தனர். பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில்வே போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தொடர் விடுமுறை காரணமாக, பேருந்து, ரயில்கள், சொந்தவாகனங்கள் என சென்னையில் இருந்து 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு பகுதிகளுக்கு நேற்று பயணமாகினர். இதேபோல், இன்றும் ஏராளமானோர் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT