

போடி: தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஆறுகளிலும், அருவிகளிலும் நீர்பெருக்கு அதிகரித்து வரு கிறது. எனவே, நீர் நிலைகளில் பொதுமக்கள் யாரும் இறங்க வேண்டாம் என, நீர்வளத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், முல்லைப் பெரியாறு, மூல வைகை உள்ளிட்ட மாவட்டத்தின் பிரதான ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும், வைகையின் துணை ஆறுகளான கொட்டக்குடி, சுருளி யாறு, மஞ்சளாறு, பாம்பாறு, சண்முகாநதி உள்ளிட்ட பல ஆறுகளிலும் நீர்ப்பெருக்கு ஏற் பட்டுள்ளது. திடீர் மழையால் ஆறுகளில் நீர்வரத்து அவ்வப் போது உயர்ந்து வருகிறது.
ஆனால், இதை அறியாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆறுகளிலும், தடுப்பணை களிலும் குளித்து வருகின்றனர். வீரபாண்டி முல்லைப் பெரி யாறு, குரங்கணி அருவி, போடி அணைப் பிள்ளையார் கோயில் தடுப்பணை உள்ளிட்ட பல இடங்களிலும் இந்நிலை தொடர்கிறது.
சிலர் மதுபானம் அருந்திவிட்டு ஆபத்தான இடங்களில் குளிப்பதுடன், ஓடியாடி விளையாடியும் வருகின்றனர். வெள்ள அபாயம் உள்ளதால், ஆறுகளில் இறங்க வேண்டாம் என்று பல இடங்களிலும் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பலரும் இதனை கண்டு கொள்வதில்லை.
எனவே, நீர்வளத் துறை மற்றும் வனத் துறை அதிகாரிகள் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.