

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் அட்டாக் பாண்டியின் ஜாமீன் மனு நான்காவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பர் பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில், கீரைத்துறையைச் சேர்ந்த அட்டாக்பாண்டியை 20 மாதங்களுக்கு முன்பு மும்பையில் போலீஸார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். பின்னர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் நண்பர் ராம்கி என்ற ராமகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கிலும் அட்டாக்பாண்டி கைது செய்யப்பட்டார்.
பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் 3 முறையும், ராமகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கில் இரு முறையும் அட்டாக்பாண்டியின் ஜாமீன் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியாகியுள்ளது. இந்நிலையில் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் நான்காவது முறையாக ஜாமீன் கேட்டு அட்டாக்பாண்டி ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில் இரண்டு ஆண்டுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறேன். உடல் நலம் சரியில்லை. இதனால் ஜாமீன் வழங்க வேண்டும் அவர் கூறியிருந்தார். இதேபோல் ராமகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கில் 3-வது முறையாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், பொட்டு சுரேஷ் கொலை, ராம்கி கொலை முயற்சி வழக்குகளில் அட்டாக் பாண்டி மூளையாக செயல்பட்டுள்ளார். அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. மதுரை நகரில் மட்டும் 13 வழக்குகள் உள்ளன. மதுரை புறநகரிலும், பிற மாவட்டங்களிலும் அட்டாக்பாண்டி மீது வழக்குகள் உள்ளன. இதனால் ஜாமீன் வழங்கக்கூடாது என்றார்.
மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், அட்டாக்பாண்டி மீதான பெரும்பாலன வழக்குகள் ஜோடிக்கப்பட்டவை. 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட தயராக உள்ளோம் என்றனர். பின்னர் தீர்ப்பு கூறுவதை நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்நிலையில் அட்டாக்பாண்டியி்ன் இரு ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி பொங்கியப்பன் இன்று தீர்ப்பளித்தார்.