

சென்னை: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மறைவு ஆன்மிக உலகுக்கு பேரிழப்பு என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமான செய்தி வேதனை தருகிறது. கோயில் கருவறைகளில் பெண்களும் சென்று வழிபாடு நடத்தும் முறையைக் கொண்டு வந்து, பாமர மக்கள்கூட அம்மன் சந்நிதானத்தில் சென்று வழிபாடு நடத்தும் வகையில் புரட்சி செய்தவர். அவரது மறைவு ஆன்மிக உலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பு.
திக தலைவர் கி.வீரமணி: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மறைவு செய்தியறிந்து வருந்துகிறேன். அவருடைய பக்தி, மதச் சிந்தனைக் கொள்கையில் உடன்பாடு இல்லையென்றாலும், அதில் அவர் ஒரு மவுனப் புரட்சியாளராகவே இறுதிவரை இருந்தது மிகவும் வியக்கத்தக்கது. பக்தி திருப்பணியோடு, மருத்துவம், வேளாண்மைபோன்ற பல கல்வித் திருப்பணிகளையும் செய்தவர். அவரது மறைவால் வாடும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
விசிக தலைவர் திருமாவளவன்: ‘அம்மா’ என்று செவ்வாடை பக்தர்களால் அன்போடு அழைக்கப்பட்ட பங்காரு அடிகளாரின் மறைவு வேதனையளிக்கிறது. ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்களைத் தொடங்கி பெண்களே கோயிலின் கருவறைக்குள் சென்று பூஜை செய்வதற்கு வழிவகுத்தவர். பக்தியை ஜனநாயகப்படுத்தி ஆன்மிகப் புரட்சி செய்து காட்டியவர். அவரது மறைவு பேரிழப்பு.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: கருவறைக்குள் பெண்கள் நுழையக் கூடாது, வழிபாடு நடத்தக் கூடாது என்ற மூட நம்பிக்கைகளை தகர்த்து பெருமளவில் பெண்கள் வழிபாடு நடத்த வழிவகுத்த சமயப் புரட்சியாளர் பங்காரு அடிகளார். சிறுசிறு வழிபாட்டு நம்பிக்கைகள் மூலம் ஏழைமக்களுக்கு எட்டாக் கனியாக இருந்த இறைவழிபாட்டை எளிமைப்படுத்தியவர். அவரது இழப்பென்பது ஈடுசெய்ய இயலாதது.
சமக தலைவர் சரத்குமார்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைந்த செய்தி வேதனையளிக்கிறது. அனைத்து நாட்களிலும் பெண்களுக்கு கோயிலில் அனுமதியளித்து, ஆன்மிகப் புரட்சி செய்தவர். அவரது இழப்பு ஆன்மிகத்துக்கும், தமிழகத்துக்கும் ஈடுசெய்ய முடியாதது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தருமபுரம் ஆதீனம்: தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் கயிலைஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘ஆன்மிகம், சமுதாயம், கல்வி ஆகிய துறைகளில் மிகப்பெரிய சாதனை செய்தவர் பங்காரு அடிகளார். பட்டிதொட்டி எங்கும் பக்தியை உருவாக்கி, பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்தவர். பக்தியின் மூலமாகவும், பிரச்சாரங்களின் மூலமாகவும் நாம் சாதிக்க முடியாததை, 20 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் நாத்திகம் இருந்ததை மடைமாற்றி ஆத்திக வழியில், ஆன்மிக வழியில் இட்டுச் சென்றவர். மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்திய, அவரது மறைவு ஆன்மிக வளர்ச்சிப் பாதையில் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’’ என்று கூறியுள்ளார்.