தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் ரூ.55 லட்சம் செலவில் கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் இம்மாத இறுதியில் தொடக்கம்

தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் ரூ.55 லட்சம் செலவில் கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் இம்மாத இறுதியில் தொடக்கம்
Updated on
1 min read

தமிழக அரசு தொல்லியியல் துறை சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் ரூ.55 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான பணிகள் இம்மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என தொல்லியல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

கீழடி தொல்லியல் களம் என்பது இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு செய்யப்பட்டு வரும் ஒரு சங்க கால வசிப்பிடம் ஆகும். இந்த அகழாய்வு மையம் சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றங்கரையில் கீழடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்துக்கு அடுத்து இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான அகழாய்வு இதுவாகும்.

இந்திய தொல்லியல் துறையால் இங்கு 3 ஆண்டுகள் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் இங்கு அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆணையர் (பொறுப்பு) டி.ஜகந்நாதன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கீழடி கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இந்திய தொல்லியல் துறையால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு மொத்தம் 7,818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த அகழாய்வில் வரலாற்று தொடக்கக்கால (சங்ககாலம்) மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும் அரிய தொல்பொருட்கள், வாழ்விடப் பகுதியில் வீடுகள் இருந்ததற்கான கட்டுமான எச்சங்கள் மற்றும் சான்றுகள் வெளிக் கொணரப்பட்டுள்ளன.

அவை பண்டைய தமிழ் மக்களின் நாகரிக வாழ்வினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. இங்கு கிடைக்கப் பெற்றுள்ள தொல்பொருட்களில் செங்கல் கட்டுமானங்கள், சுடுமண்ணால் ஆன உறைக் கிணறுகள், பல அரிய கல்மணிகள், யானை தந்தத்தினால் ஆன பொருட்கள், சுடுமண் பொம்மைகள், சுடுமண் பாத்திரங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்ற பல்வேறு வகையான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.

கீழடியில் மேற்கொண்டு வரும் அகழாய்வு பகுதியானது 100 ஏக்கர் நிலப் பரப்பில் பரந்து விரிந்து தொல்லியல் மேடாக காணப்படுகிறது. இங்குக் குறைந்த நிலப்பரப்பிலே அகழாய்வுக் குழிகள் அமைக்கப்பட்டு இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இவ்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கீழடியில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டு தொல்லியல் எச்சங்களை வெளிக்கொணர வேண்டும் என்ற நோக்கில், 2017-18-ம் ஆண்டில் அகழாய்வு மேற்கொள்ள ஏதுவாக இந்திய தொல்லியல் துறையின் தொல்லியல் மத்திய ஆலோசனைக் குழுவின் அனுமதியை கோரியது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தொல்லியல் மத்திய அரசு ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இந்த அகழாய்வு மேற்கொள்ள தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த மாத இறுதியில் இந்த அகழாய்வு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இந்த அகழாய்வில் இன்னும் பல அரிய தொல்பொருட்களை வெளிக் கொணர இயலும். இதன் வாயிலாக தமிழகத்தில் பண்டைய அரசியல், சமுதாய, பொருளாதார மற்றும் பண்பாட்டினை முழுமையாக வெளிப்படுத்த இயலும். இவ்வாறு ஜகந்நாதன் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in