Published : 02 Apr 2014 10:05 AM
Last Updated : 02 Apr 2014 10:05 AM

மாநகராட்சி கட்டுப்பாட்டில் புதிதாக 18 சுகாதார மையங்கள், புதியவர்கள் நியமனம்: டாக்டர்கள், நர்ஸ்கள் கலக்கம்

சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதியில் உள்ள 3 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 துணை சுகாதார மையங்களை மாநகராட்சி நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. இதனால், அங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள் எந்த ஊருக்கு பணியிட மாற்றம் வருமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.

சென்னை மாநகராட்சி விரிவாக்கப்பட்ட பகுதியில் உள்ள செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், புழுதிவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அவற்றின் கீழ் வரும் 15 துணை சுகாதார மையங்களை மாநகராட்சி தன் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. இவற்றில் டாக்டர்கள், நர்ஸ் கள், மருந்தாளுநர்கள், லேப் டெக்னீஷியன்களை மாநகராட்சி விரைவில் நியமிக்க உள்ளது.

இதுதொடர்பாக அங்கு தற்போது பணியாற்றிவரும் பொது சுகாதாரத் துறை டாக்டர்கள் கூறியதாவது:

செம்மஞ்சேரி, புழுதிவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 5 துணை சுகாதார மையங்களை சென்னை மாநகராட்சி செவ்வாய்க்கிழமை முதல் தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. துரைப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 10 துணை சுகாதார மையங்களை இன்னும் 10 நாளில் எடுக்க உள்ளது. இந்த 3 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 8 டாக்டர்கள், 2 மருந்தாளுநர், 2 லேப்டெக்னீஷியன், 10 நர்ஸ்கள் உள்ளனர். 15 துணை சுகாதார மையங்களிலும் தலா ஒரு கிராம சுகாதார செவிலியர் உள்ளார்.

மாநகராட்சி புதிதாக நியமனம்

இவற்றில் டாக்டர்கள், நர்ஸ் கள், மருத்துவப் பணியாளர்களை மாநகராட்சி புதிதாக நியமிக்க உள்ளது. அவர்கள் வந்துவிட்டால், எங்களை வேறு இடங்களுக்கு மாற்றி விடுவார்கள். குடும்பத் துடன் இங்கேயே குடியேறிவிட்ட எங்களுக்கு இது சிரமமாக இருக்கும். குழந்தைகளின் படிப்பு வீணாகிவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது.

புதிய மையங்கள் வேண்டும்

தமிழகத்தில் சராசரியாக 30 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், 5 ஆயிரம் பேருக்கு ஒரு துணை சுகாதார மையமும் இருக்க வேண்டும். ஆனால், ஆரம்ப சுகாதார நிலையம் உள்ள மேடவாக்கம், மூவரசம்பேட்டை, பொழிச்சலூர் உள்ளிட்ட இடங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அதேபோல துணை சுகாதார மையம் உள்ள இடங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மக்கள்தொகைக்கு ஏற்ப கூடுதலாக ஆரம்ப சுகாதார நிலையத்தையும், துணை சுகாதார மையத்தையும் பொது சுகாதாரத் துறை தொடங்க வேண்டும். அந்த இடங்களில் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

‘பயப்பட வேண்டாம்’

இதுதொடர்பாக பொது சுகா தாரத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்களில் டாக்டர்கள், நர்ஸ்களை மாநகராட்சி நியமித்த பிறகு, அங்கு பணியாற்றும் எங் களது டாக்டர்கள், நர்ஸ்களை திரும்பப் பெறுவோம். அவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகா தார மையங்களிலேயே நியமிக் கப்படுவார்கள் என்பதால் பயப் படத் தேவையில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதலாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள் திறக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x