செல்போனில் பறந்த ‘எமர்ஜென்சி அலர்ட்’ முதல் தொடரும் காசா துயரம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.20, 2023

செல்போனில் பறந்த ‘எமர்ஜென்சி அலர்ட்’ முதல் தொடரும் காசா துயரம் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.20, 2023
Updated on
2 min read

அரசு மரியாதையுடன் பங்காரு அடிகளார் உடல் நல்லடக்கம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க, பங்காரு அடிகளார் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது பக்தர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க கோஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக பங்காரு அடிகளாரின் உடலுக்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மிகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத்தக்கது. . பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்" என்று அறிவித்திருந்தார். அதன்படி பங்காரு அடிகளார் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாடு முழுவதும் செல்போனில் பறந்தது ‘எமர்ஜென்சி அலர்ட்’ : அவசர காலங்களில் மக்களை எச்சரிக்கும் விதமாக ’செல் ஒலிபரப்பு எச்சரிக்கை’ என்னும் அதிநவீன தொழில்நுட்ப சோதனை இன்று மேற்கொள்ளப்பட்டது. நாடு முழுவதும் உள்ள செல்போன் பயனர்களுக்கு, அரசு அபாய எச்சரிக்கை ஒலியுடன்கூடிய குறுஞ்செய்தியை அனுப்பி உள்ளது. இது தொடர்பாக முன்னெச்சரிக்கையும் கொடுக்கப்பட்டது.

காவல்துறை சுதந்திரமாக சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டும்: ஆளும் திமுக அரசின் மக்கள் விரோதச் செயல்களுக்கு துணை போகாமல், சட்டத்தின் மாண்பைக் காக்கும் வகையில் சுதந்திரமாக சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்று காவல் துறைக்கு அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே காவலர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். காவல் துறையினருக்கு போதிய ஊதியம் வழங்காதது துரோகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அண்ணாமலையால் தமிழக பாஜக மிகப் பெரிய விலை தரும்”: “மக்களவைத் தேர்தலில் இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் ஓர் இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் டெபாசிட் இழந்து அண்ணாமலையின் அருவருப்பு அரசியலால் தமிழக பாஜக மிகப்பெரிய விலையைத் தரப்போவது காலத்தின் கட்டாயமாகும்” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 6-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டிப்பது இது 9-வது முறையாகும்.

தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க மறுப்பு: "அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், சங்கரய்யாவின் மகத்தான தியாக வாழ்வை அங்கீகரிக்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது நடவடிக்கை மூலம் ஆளுநர் பொறுப்பை மென்மேலும் சிறுமைப்படுத்தியே வருகிறார். ஆளுநரின் இந்த தரக்குறைவான நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக" மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தூய்மை பணியின் போது இறந்தால் ரூ.30 லட்சம் இழப்பீடு: கழிவுநீர் அகற்றும் பணியின்போது தொழிலாளர்கள் உயிரிழந்தால் குறைந்தபட்சம் ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

“வியன்னா ஒப்பந்தம் மீறப்படவில்லை” : தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு கோரியதில் வியன்னா ஒப்பந்தம் மீறப்படவில்லை என்று கனடாவுக்கு இந்திய வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது.

முன்னதாக, காலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் சர்ச்சை நீடிக்கும் நிலையில், இந்தியாவில் பணியாற்றி வந்த 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்பப் பெற்றுவிட்டது. இந்தியா விதித்த கெடு முடிவடைந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் முதல் பிராந்திய விரைவு ரயில் சேவை துவக்கம்: இந்தியாவின் முதல் பிராந்திய விரைவு ரயில் சேவையான ‘ரேபிடக்ஸ்’ இன்று பிரதமர் நரேந்திர மோடியால் உத்தரப் பிரதேசத்தின் சாஹிபாபாத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரயில் சேவைக்கு ‘நமோ பாரத்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

“நரகத்தின் வாயிலாக காசா மாறுகிறது”: "காசா நகரம் கடந்த சில வாரங்களாக நரகத்தின் வாயிலாக மாறியிருக்கிறது" என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமையைச் சேர்ந்த ஜூலியடே டோமா கூறியுள்ளார். மேலும் அவர் "முற்றுகையிடப்பட்டுள்ள காசா மக்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன. நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது" என்று பதற்றத்துடன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நிவாரணப் பொருள்களுடன் 20 லாரிகள் எல்லையில் காத்திருக்கும் நிலையில், எகிப்து ராஃபா சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்றைக்குள் காசாவுக்குள் லாரிகள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in