

சென்னை: நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் தினசரி உயர்ந்து வருகிறது. இதனால், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சாலைகளில் 24 மணி நேரமும் வாகனங்கள் ‘சர்...சர்ரென...’ பறந்து கொண்டிருக்கின்றன. இதனால், பாதசாரிகள் சாலையை கடந்து மறுமுனைக்கு செல்ல சில இடங்களில் நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதசாரிகளின் வசதிகளுக்காக நடைமேம்பாலம் அமைக்கப்பட்டிருந்தாலும், அதனை யாரும் பயன்படுத்துவதில்லை. வழக்கம்போல, வாகனங்களுக்கு இடையில் சாலைகளை கடக்கின்றனர்.
காட்சி பொருளாக மட்டுமே பல இடங்களில் நடைமேம்பாலம் இருக்கிறது. இதற்கு காரணம், பராமரிப்பு இன்றியும், படிக்கட்டுகள் உடைந்தும் அச்சுறுத்தும் விதமாக நடைமேம்பாலங்கள் இருப்பதுதான் என மக்கள் கூறுகின்றனர். இதில் நடந்து ‘ரிஸ்க்’ எடுப்பதைவிட, வாகனங்களுக்கு நடுவே சாலைகளையே கடந்து விடலாம் என பாதசாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
சென்னையில், மாநகராட்சி சார்பில் 272 பாலங்களும், நெடுஞ்சாலை துறை சார்பில் 27 பாலங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பாதசாரிகளுக்கான 35 நடைமேம்பாலங்கள் உள்ளன. குறிப்பாக, அண்ணாநகர் மேற்கு, குரோம்பேட்டை உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களில் வயதான பாதசாரிகளுக்காக, லிப்ட் வசதிகள், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட சிறப்பு வசதிகளுடன் நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், பல இடங்களில், நடைமேம் பாலங்களின் படிக்கட்டுகள் உடைந்தும், மின்விளக்கு இல்லாமலும் பராமரிப்பு இன்றி உள்ளன. இதனால், பெரும்பாலான பாதசாரிகள், நடைமேம்பாலங்களை பயன்படுத்தாமல் தவிர்க்கின்றனர். அந்த வகையில், மத்திய சென்னை பகுதியான நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலை, உத்தமர் காந்தி சாலை, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நடைமேம்பாலங்கள் மக்கள் பயன்பாடின்றி, காட்சி பொருளாக மட்டுமே காணப்படுகின்றன.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் விக்னேஷ் பால்பாண்டியன் கூறும்போது, சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள நடைமேம்பாலம் பாதசாரிகள் நடப்பதற்கு ஏற்றதாக இல்லை. சில இடங்களில் படிக்கட்டுகள் உடைந்திருக்கின்றன. உடைந்து போன இடத்தில் மரப்பலகையை வைத்து, கம்பி கட்டி வைத்திருக்கிறார்கள். நடைமேம்பாலங்கள் இவ்வாறு பராமரிப்பு இன்றி இருக்கும்போது, அதனை எப்படி பயன்படுத்த தோன்றும். தற்போது எதிர்பாரத விபத்துக்கள் அதிகளவில் நடக்கிறது. முதியோர்களும், படிக்கட்டில் ஏறி நடைமேம்பாலம் வழியாக மறுமுனைக்கு சென்று படிக்கட்டில் இறங்குவதற்கு சிரமப்படுகின்றனர். அதற்காக சாலையை கடந்து செல்வது சரியென்று கூறவில்லை. மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், பராமரித்து, சில நவீன வசதிகளை ஏற்படுத்தினாலே மக்கள் நடைமேம்பாலத்தை பயன்படுத்த தொடங்கி விடுவார்கள் என்றார்.
செவிலியர் நித்யா கூறும்போது, ‘நுங்கம்பாக்கம், ராயப்பேட்டையில் உள்ள நடைமேம்பாலங்கள் உள்பட சென்னையில் பல நடைமேம்பாலங்கள் இரவு நேரங்களில் மின் விளக்கு வசதி இல்லாமல், இருளில் மூழ்கி கிடக்கின்றன. இதனால், இரவு நேரங்களில் நடைமேம்பாலங்களை பயன்படுத்துவதற்கே அச்சமாக இருக்கிறது. பராமரிப்பு இன்றி கிடக்கும் இதுபோன்ற நடைமேம்பாலங்கள், மதுக்குடிப்பவர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் கூடாரமாக அமைந்து விடுகிறது. ரயில் நிலையங்களில் உள்ளது போல் தானியங்கி நகரும் படிக்கட்டுகள், லிப்ட் வசதிகளை, அனைத்து நடைமேம்பாலங்களிலும் ஏற்படுத்தி, மக்களை ஈர்த்தால் மட்டுமே, நடைமேம்பாலங்களை பயன்படுத்த மக்களும் ஆர்வம் காட்டுவார்கள்’ என்றார்.
சூளைமேட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் துரை கூறும்போது, ‘வெளிநாடுகளில், அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மக்கள் சாலைகளை கடப்பார்கள். நடைமேம்பாலங்கள் இருந்தால், அதை பயன்படுத்திதான் சாலையின் மறுபக்கம் செல்வார்கள். ஆனால், அதுபோன்ற நல்ல பழக்க வழக்கங்களை நம் நாட்டு மக்கள் பின்பற்றுவதில்லை. சாலையில் வாகனங்கள் வருகிறதா இல்லையா என்பதை கூட பார்க்காமல் இஷ்டப்படி சாலையை கடக்கின்றனர்.
இதனால், எங்களை போன்ற வாகன ஓட்டிகள் சாலையில் சரியாக வாகனங்களை இயக்கினாலும், விபத்துகள் நிகழ்ந்து விடுகிறது. மக்களிடம் சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கு, முதலில் சுரங்கப்பாதைகள், நடைமேம்பாலங்களை முறையாக பராமரிக்க வேண்டும்’ என்றார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் கூறும்போது, ‘இன்றைய காலத்தில் பொதுமக்கள், படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதை சிரமமாக கருதுகின்றனர். அதனால்தான் தி.நகரில் புதிதாக திறக்கப்பட்ட நடைமேம்பாலத்தில் நகரும் படிக்கட்டு வசதி அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தற்போது சென்னையில் உள்ள அனைத்து நடைமேம்பாலங்களிலும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, மக்கள் பயன்படுத்தும் வகையில், நவீன வசதிகளுடன் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நடைமேம்பாலங்கள் அனைத்தும் நகரும் படிக்கட்டு வசதியோடு மேம்படுத்தப்படும்’ என்றார்.