Last Updated : 01 Jan, 2018 05:01 PM

 

Published : 01 Jan 2018 05:01 PM
Last Updated : 01 Jan 2018 05:01 PM

ஜெ.,வுக்குப் பிடித்த சமையல் பணியாளர் ராஜமின் தற்போதைய நிலை

போயஸ் கார்டனின் வேதா நிலையத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவுக்கு சமைத்த ராஜம், தற்போது செல்ல இடம் இல்லாமல் தவித்து வருகிறார்.

ஒரு காலத்தில் அதிகாரம், பரபரப்பு, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் வருகை, கட்சிப் பணியாளர்கள் கூடும் இடமாகப் பரிமளித்த இடம் போயஸ் இல்லம்.

'வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும்' என்று அரசு அறிவித்ததை அடுத்து, தற்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது. அங்குள்ள பணியாளர்கள் அனைவரும் வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

கடைசியாக புதுக்கோட்டையில் இருந்துவந்து பங்களாவில் பணிபுரிந்தவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கே திரும்ப உள்ளனர். ஆனால் ஜெயலலிதாவுக்குப் பிடித்த சமையல் பணியாளர் ராஜம் செல்ல இடமின்றித் தவிக்கிறார்.

ராஜம்- அவரின் முழுப்பெயரோ, வயதோ, ஊரோ எதுவுமே யாருக்கும் தெரியவில்லை. எவரிடமும் அதுகுறித்துப் பேசவும் அவர் விரும்பவில்லை. புகைப்படம் எடுக்கவும் அனுமதிக்கவில்லை. 70 வயதுக்கு மேற்பட்டவராகத் தெரிகிறார் ராஜம்.

மதுரையில் இருந்து அழைத்து வரப்பட்டவரான ராஜம், ஆரம்பத்தில் வீட்டு வேலைகளில் உதவுவதற்காக நியமிக்கப்பட்டார். 1991-ல் ஜெயலலிதா முதல்வரான பிறகு, அவருடனே சேர்ந்து வசிக்க ஆரம்பித்தார் ராஜம். அவருக்குப் பிடித்த சமையல்காரரகாவும் மாறினார். 2011 தேர்தல் வரை, பிரச்சாரங்களுக்குச் செல்லும் இடங்களுக்கெல்லாம் ராஜத்தையும் அழைத்துச் செல்வார் ஜெயலலிதா.

ராஜம் குறித்து 'தி இந்து'விடம் பேசும் மூத்த காவல்துறை அதிகாரி, ''வழக்கமான பரிசோதனைகளில் ஈடுபடும்போது மட்டுமே ராஜத்தைப் பார்த்திருக்கிறோம். அப்போது அவர் பின்புறத்தில் நடந்துகொண்டோ, செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக்கொண்டோ இருப்பார். ஜெ.வின் நீண்ட நாள் தேர்தல் சுற்றுப் பயணங்களின்போது ராஜமும் உடன் செல்வார்.

எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுதான். அது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் அவர் நிறைய வருடங்கள் உடன் இருந்தார் என்பதுதான்'' என்கிறார்.

முன்னதாக 'தி இந்து'வுக்கு பேட்டியளித்த ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் கூறும்போது, ஜெயலலிதா, சசிகலா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ராஜத்தை மிகவும் மதிப்புடன் நடத்தியதாகத் தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன் சென்னை ஆட்சியர் வி.அன்புச்செல்வன் மற்றும் அதிகாரிகள் போயஸ் இல்லத்துக்குச் சென்று, நினைவிடமாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது ஆட்சியரிடம் பேசிய ராஜம், தங்கியிருக்கத் தனக்கு இடம் இல்லாததாகவும், வாழ்க்கையின் மீதி நாட்களைக் கழிக்க ஒரு வீடு வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

தற்போது அவர் எந்த ஆதரவும் இல்லாமல், ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினருடன் போயஸ் இல்லத்திலேயே தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x