

சென்னை: நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை நேற்றுடன் விலகியது. தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் இருந்து தென்மேற்குப் பருவமழை அக்.19-ம் தேதி (நேற்று) விலகியுள்ளது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழகத்துக்கு 35 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 8 சதவீதம் அதிகம். சென்னைக்கு 77 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 74 சதவீதம் அதிகமாகும்.
இந்நிலையில், வரும் 22-ம் தேதி தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக பெய்யும் அளவிலேயே மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்துக்கு 44 செ.மீ. மழை கிடைக்கும்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவக்கூடும். இது நாளை (அக். 21) தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேலும் வலுவடைந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
அரபிக்கடல் மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் நிலவக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடக்க நிலையில் வலு குறைந்து காணப்படும்.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மாநிலத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 22, 23-ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தில் சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும்.
அக். 19-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தெற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்றும், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நாளையும் மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் கூறினார்.