ககன்யான் மாதிரி விண்கலம்: டிவி-டி1 ராக்கெட்டில் நாளை ஏவப்படுகிறது

ககன்யான் மாதிரி விண்கலம்: டிவி-டி1 ராக்கெட்டில் நாளை ஏவப்படுகிறது
Updated on
1 min read

சென்னை: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் டிவி-டி1 ராக்கெட் மூலம் நாளை (அக்.21) விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது.

ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து விண்ணுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தீவிரம் காட்டிவருகிறது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்கீழ் தரையில் இருந்து 400 கி.மீட்டர் தூரம் சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்துவர இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்குமுன் 3 கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அந்தவகையில் இஸ்ரோவின் முதல்கட்ட சோதனை நிகழ்வு ஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து நாளை (அக்டோபர் 21) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. அதாவது மனிதர்களை விண்ணுக்கு சுமந்து செல்லவுள்ள மாதிரி விண்கலத்தை (crew module) தரையில் இருந்து 17 கி.மீ. தூரம் வரை அனுப்பி, மீண்டும் அதை பூமிக்கு கொண்டுவந்து வங்கக்கடலில் இறக்கப்படும். இந்த சோதனைக்கு டிவி-டி1 எனும் ஒரு பூஸ்டர் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது.

புவியில் இருந்து ராக்கெட் புறப்பட்டு சுமார் 17 கி.மீ உயரத்தில் சென்றதும் விண்கலத்தில் வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்துவிடும். அதை பாராசூட்கள் மூலம் ஹரிகோட்டாவில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் வங்கக்கடலில் பத்திரமாக இறக்கி சோதனை செய்யப்பட உள்ளது.

வங்கக்கடலில் விழுந்த உடன் விண்கலத்தை இந்திய கடற்படையின் சிறப்பு கப்பல் மற்றும் நீச்சல் குழுவினர் மீட்டு இஸ்ரோவிடம் ஒப்படைப்பார்கள். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட ஆராய்ச்சி பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொள்வார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in