Published : 20 Oct 2023 05:08 AM
Last Updated : 20 Oct 2023 05:08 AM

தமிழகத்தில் போட்டியிட்டால் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து களம் காணுவேன்: சேலத்தில் சீமான் அறிவிப்பு

சேலம்: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல, இலங்கைராணுவம் தமிழக மீனவர்களைத்தாக்குவது உள்ளிட்ட அத்துமீறல்களில் ஈடுபடுகிறது.

ஆனால், மத்திய, மாநில அரசுகள் இவற்றைத் தட்டிக்கேட்பதில்லை. தமிழர்கள் தாக்கப்படுவதையும், அவமானப்படுத்தப்படுவதையும் சகித்துக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர்.

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிஆட்சி அமைக்கும்போது, மீனவர்கள் மீது கைவைக்க முடியாது. மக்களவையில் அதிக எம்.பி.க்களை வைத்திருக்கும் திமுக, இந்த விவகாரத்தில் கடிதம்மட்டுமே எழுதுகிறது. நான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த பின்னர், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால், முதல்வர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்.

காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து, கூட்டணியில் இருந்து திமுக விலகியிருக்க வேண்டும்.

தமிழக மக்கள் தேசிய அரசியலைத்தான் விரும்புகிறார்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அவர் நிறையபடிக்க வேண்டும். பல தேசியங்களின் ஒன்றியம்தான் இந்தியா என்பதை உணர வேண்டும்.

தமிழகத்தில் திமுக, அதிமுகமாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. நாம் தமிழர் கட்சி மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும். இதற்காகத்தான் நாங்கள் பாடுபட்டு வருகிறோம். தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டால், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்.

இவ்வாறு சீமான் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x