தியாகி சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: தமிழக ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி வேண்டுகோள்

தியாகி சங்கரய்யா
தியாகி சங்கரய்யா
Updated on
1 min read

சென்னை: சுதந்திரப் போராட்டத் தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்று ஆளுநரை கேட்டுக் கொள்வதாக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திரப் போராட்டத் தியாகியும், தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும், சிறந்த சட்டப்பேரவை உறுப்பினருமான என். சங்கரய்யாவின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு கவுர டாக்டர் பட்டம் வழங்க, கடந்த ஆக.18-ம்தேதி நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, செப். 20-ம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவைக் கூட்டத்தில், பட்டமளிப்பு விழாவின்போது, என்.சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் அதிகாரம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக சட்டத்தின்படி ஆட்சிப்பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கவுரவ டாக்டர் பட்டம் அல்லது சான்றிதழில் பல்கலைக்கழக வேந்தர் கையொப்பமிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, ஆட்சிக்குழு, ஆட்சிப்பேரவை தீர்மானங்களின் அடிப்படையில், என்.சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கஅனுமதி கோரும் கோப்பு, பல்கலைக்கழகத்தால் வேந்தரான ஆளுநருக்கு சமர்ப்பிக்கப்பட்டபோது, அவர் அதில் கையெழுத்திட மறுத்துள்ளார்.

இந்நிலையில், நவ. 2-ம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழக ஆட்சிக்குழு, ஆட்சிப்பேரவை ஆகியவற்றின் தீர்மானங்களின்படி என்.சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in