

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே மாற்று இடம் கேட்டு இலங்கை தமிழர்கள் வெளியேற மறுத்த நிலையில், மின் இணைப்பை துண்டித்து அவர்களை வெளியேற்றியதாக புகார் எழுந்துள்ளது.
இலங்கை தமிழர் முகாம்களில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், தலா ரூ.5 லட்சத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மானாமதுரை அருகே மூங்கில் ஊருணி முகாமில் 188 குடும்பங்கள் உள்ளன. முதல் கட்டமாக, 52 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் அந்த குடும்பங்களை அதிகாரிகள் வெளியேற்றினர். மேலும், அவர்கள் குடியிருந்த பழைய வீடுகளும் இடிக்கப்பட்டன.
அதையடுத்து, அவர்கள் ஆங்காங்கே வாடகை வீடுகளில் குடியிருந்து வருகின்றனர். மேலும், அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், மற்ற வீடுகளையும் இடித்து விட்டு மொத்தமாக 188 வீடுகள் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக வீடுகளை விட்டு வெளியேறுமாறு தொடர்ந்து வலியுறுத்தினர்.
ஆனால், ஏற்கெனவே வெளியேறிய 52 குடும்பங்களுக்கு ஏற்பட்ட சிரமம் தங்களுக்கும் ஏற்படும் எனக் கருதி வெளியேற மறுத்துவிட்டனர். மேலும், மாற்று இடத்துக்கு ஏற்பாடு செய்து கொடுத்தால்தான் வெளியேறுவதாக தெரிவித்தனர். இதனிடையே, வீடுகளுக்கான மின் இணைப்பை துண்டித்து தங்களை வெளியேற்றியதாக, இலங்கை தமிழர்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து இலங்கை தமிழர்கள் சிலர் கூறுகையில், ‘ஏற்கெனவே வெளியேறிய 52 குடும்பத்தினர் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். எங்களுக்கு அருகில் வாடகை வீடுகள் கிடைக்கவில்லை. இதனால் மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடுத்தால் குடிசை அமைத்து தங்க தயாராக உள்ளோம். ஆனால், எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டனர்’ என்று கூறினர்.
இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறுகையில். ‘அருகிலேயே அவர்களை தங்க வைக்க அரசு இடம் கிடையாது. இதனால் அவர்களை வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. வீடுகளை விரைந்து கட்டி முடிக்க ஒப்பந்ததாரரிடம் கூறியுள்ளோம்’ என்றனர்.