

மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோவை மீண்டும் டீன் ஆக பதவியிறக்கம் செய்து மதுரை உயர் நீதிமன்ற கிளை இன்று உத்தரவிட்டது.
மருத்துவக் கல்வி இயக்குநராக எட்வின் ஜோ நியமிக்கப்பட்டதை எதிர்த்து கரூர் மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி கைலராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் தனக்கு தகுதி இருந்தும் மருத்துவ கல்வி இயக்குநர் பதவிக்கு தன்னை நியமனம் செய்யாமல் எட்வின் ஜோவை அரசு நியமித்துள்ளது. எனவே, எட்வின் ஜோவை நீக்கிவிட்ட தன்னை அந்த பதவிக்கு நியமிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, எட்வின் நியமனம் செல்லாது என்றும் அது தொடர்பான அரசாணை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தது. மேலும்,
பணி மூப்பு, கல்வித் தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்யுமாறு அறிவுறுத்தியது.
இந்நிலையில், கரூர் மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி கைலராஜன், இந்த வழக்கு தொடர்பாகவே மேலுமொரு மனுவை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்தார். அந்த மனு இன்று (திங்கள்கிழமை) நீதிபதி சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி, சுகாதார செயலர் இன்று பிறப்பித்த அரசாணையை அளித்தார். அதன்படி, மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ பதவியிறக்கம் செய்யப்பட்டதாகக் கூறினார். இதனையடுத்து இந்த வழக்கை முடித்துவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
நீதிமன்ற உத்தரவால், தமிழகத்தில் மருத்துவக் கல்வி இயக்குநர் பணியிடம் காலியாகி உள்ளது.