

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து முக்கிய பகுதிகளில் சாதிய அடையாளங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டத்தில் முதற்கட்டமாக 94 இடங்களில் சாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை மற்றும் அரசுத்துறைகள் இணைந்து சாதிய அடையாளங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டது பரவலாக வரவேற்பை பெற்றுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலும் அந்தவகையில் சாதிய அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.சிலம்பரசன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் தொடங்கியிருக்கிறார்கள்.
தற்போது முதற்கட்டமாக காவல்துறையினர் வருவாய்த் துறையினருடன் இணைந்து சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட சேரன் மகாதேவி, வேலியார்குளம், சக்திகுளம் பகுதிகளில் 40 மின்கம்பங்களிலும், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட மருதம் நகர், தருவை, பிராஞ்சேரி, கோபால சமுத்திரம் பகுதிகளில் 19 மின்கம்பங்களிலும்,
அம்பாசமுத்திரம் காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட முடபாலம், திலகர்புரம் ஆகிய பகுதிகளில் 35 மின்கம்பங்கள் உட்பட நேற்று முன்தினம் ஒரே நாளில் 94 இடங்களிலுள்ள மின் கம்பங்களில் சாதிய அடையாளங்களை ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து அழித்தனர்.