Published : 10 Jan 2018 09:12 AM
Last Updated : 10 Jan 2018 09:12 AM

ஜெ.அன்பழகன் பேச்சை நீக்கியதை கண்டித்து சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு: முதல்முறையாக டிடிவி தினகரனும் வெளிநடப்பு செய்தார்

சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன், மாநில சுயாட்சி, போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம், ராஜஸ்தானில் தமிழக காவல் ஆய்வாளர் மரணம் குறித்து பேசினார். இதற்கு பதிலளித்த முதல்வர் கே.பழனிசாமி, ‘‘ராஜஸ்தானில் காவல் ஆய்வாளர் சுடப்பட்டு மரணமடைந்தது தொடர்பாக தடயவியல் ஆய்வு நடந்து வருகிறது. அந்த ஆய்வுக்குப் பிறகுதான் இறப்புக்கான காரணம் தெரியும்’’ என்றார்.

தொடர்ந்து பேசிய ஜெ.அன்பழகன், ‘இந்த அரசுக்கு 111 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது’ என குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பி.தங்கமணி, ‘‘பேரவைத் தலைவர் அறையில் 18 உறுப்பினர்கள் காலியிடம் என குறிப்பிட்டுள்ளதால் நாங்கள் முழு பெரும்பான்மையுடன்தான் இருக்கிறோம். உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவு குறித்து முதல்வர், துணை முதல்வர் வெளியிட்ட அறிக்கை உண்மையாகியுள்ளது’’ என்றார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த டிடிவி தினகரன், பேச வாய்ப்பு கேட்டார். பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததால் அவர் வெளிநடப்பு செய்தார். பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் தினகரன் கூறும்போது, ‘‘அன்பழகனுக்கு அமைச்சர் தங்கமணி பதில் சொல்லும்போது முதல்வர், துணை முதல்வர் அறிக்கை உண்மையாகியுள்ளது என்று பேசினார். அதில் என்னைப் பற்றி வருவதால் பதில் அளிக்க வாய்ப்பு கேட்டேன். வாய்ப்பு அளிக்காததால் வெளிநடப்பு செய்தேன். எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற வகையில் எனக்கு வாய்ப்பு கொடுக்குமாறு அன்பழகன் தெரிவித்தார். அதற்கும் உள்ளர்த்தம் வைக்கின்றனர்’’ என்றார். சட்டப்பேரவை உறுப்பினராகியுள்ள தினகரனின் முதல் வெளிநடப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடம் தொடர்பாக ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளது குறித்து ஜெ.அன்பழகன் பேசினார். அவர் கூறிய சில வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்த பேரவைத் தலைவர், அதிமுக உறுப்பினரை பேச அனுமதித்தார். தொடர்ந்து பேச அனுமதி அளிக்காததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x