பந்தநல்லூரில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பசுபதீஸ்வரர் கோயில் இடம் மீட்பு!

கோயில் நிலம் மீட்பு
கோயில் நிலம் மீட்பு
Updated on
1 min read

தஞ்சை: பந்தநல்லூரில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள மிகவும் பழமையான பசுபதீஸ்வரர் கோயில் இடம் மீட்கப்பட்டிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூரில் மிகவும் பழமையான பசுபதீஸ்வரர் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான இடம் பந்தநல்லூர் பிரதான சாலையில் அமைந்திருக்கிறது. அப்பகுதியை சேர்ந்த ஒருவர், அந்த இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி இருந்தார். அதோடு இவர் கடந்த 2020-ம் ஆண்டு முதல் வாடகை செலுத்தாமல் இருந்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், இது தொடர்பாக பசுபதீஸ்வரர் கோயில் நிர்வாகத்தினர், மயிலாடுதுறை அறநிலையத் துறை இணை ஆணையர் ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையில், அந்த இடத்தை மீட்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் உமாதேவி தலைமையில் துணை ஆணையர் சாந்தா, கோயில் செயல் அலுவலர் சுந்தர்ராஜ், அறநிலை துறை ஆய்வாளர் கோகிலா தேவி மற்றும் அலுவலர்கள் இணைந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான 1664 சதுர அடியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அந்த இடத்தை மீட்டனர். மேலும், அந்த இடத்தில் பதாதைகளையும் அமைத்தனர். இதைத் தொடர்ந்து, எந்தவொரு அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் அங்கு பந்தநல்லூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in