

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் அரசியல் முன்பகை காரணமாக அதிமுக மகளிர் அணி தலைவியின் மகனுடைய இரண்டு மணிக்கட்டுகளும் கடந்த மே 22-ம் தேதி துண்டிக்கப்பட்டது. அவர், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கக் கடந்த 15 நாட்களாக போயஸ் கார்டனில் முகாமிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்தவர் அங்கு மீனாள். அதிமுக மாவட்ட மகளிர் அணித் தலைவியான இவரது மகன் மருதுபாண்டியனின் மணிக்கட்டைதான் அரசியல் எதிரிகள் வெட்டியுள்ளனர். இதுகுறித்து ‘தி இந்து’-விடம் மருதுபாண்டியன் கூறியதாவது:
“போலீஸ் வேலைக்கு முயற்சித்து வருகிற நான், பல விளையாட்டு போட்டிகளில் நிறைய பரிசுகளைப் பெற்றுள்ளேன். வேலானூரணி அதிமுக ஊராட்சித் தலைவரான ரவிச்சந்தி ரன் திமுக-வில் இருந்து அதிமுக-வில் இணைந் தவர். எங்கள் குடும்பத்துடன் அரசியல் பகை கொண்டிருந்த அவர், அதிமுக-வில் சேர்ந்து வேலானூரணி ஊராட்சித் தலைவரான பிறகு மணல் கொள்ளையில் ஈடுபட்டதை நான் தட்டிக்கேட்டேன்.
சில மாதங்களுக்கு முன்பு முதல்வரின் பசுமை வீடு திட்டத்தில் 6 வீடுகள் ரவிச்சந்திரன் பரிந்துரையின் பேரில் வசதியான திமுக-வினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதுதொடர்பான ஆதாரங்களைத் திரட்டிக் கட்சிக்கு நான் அனுப்பினேன். இந்நிலையில் கடந்த மே மாதம் 22-ம் தேதி எங்கள் ஊரைச் சேர்ந்தவர் கமுதியில் சிலம்பாட்டப் போட்டி நடப்பதாக என்னை அழைத்துச் சென்றார்.
அங்குத் தேவர் கல்லூரி பின்புற மைதானத்தில் ரவிச்சந்திரன், அவரது மகன் சரவணன், மருமகன் லட்சுமணன் உள்ளிட்டோர் என்னை அரிவாளால் உடலில் 22 இடங்களில் வெட்டினார்கள். ரவிச்சந்திரன் என்னிடம், ‘இந்த ரெண்டு கை இருந்தாதானே விளையாடுவ. இந்த ரெண்டு கைதானே என் மேல புகார் எழுதிச்சு... கை இருந்தாதானே நீ போலீஸ் வேலைக்குப் போவ’ என்று சொல்லி இரண்டு மணிக்கட்டுகளை வெட்டி, ஒன்றை அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். இன்னொரு மணிக்கட்டு மட்டும் துண்டான நிலையில் என் கையில் ஒட்டியிருந்தது. எங்கள் வயல், நகை எல்லாவற்றையும் விற்று 10 லட்சம் ரூபாய் மருத்துவச் செலவு செய்துள்ளோம்.
ஒரு கையில் மணிக்கட்டை டாக்டர்கள் இணைத்துவிட்டாலும் அந்த மணிக்கட்டு செயல்படாது என்று சொல்லிவிட்டார்கள். இப்போது என்னால் சாப்பிட முடியாது. இரண்டு பேர் தாங்கி பிடித்தால்தான் நடக்க முடியும். என் மொத்த வாழ்க்கையும் போய்விட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் இருவரைத் தவிர ரவிச்சந்திரன் உள்ளிட்ட மற்றவர்கள் ஜாமீனில் வந்துவிட்டார்கள். அவர்கள் இப்போது எங்கள் குடும்பத்தையே கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டுவதால் நாங்கள் மதுரை, சென்னை என்று விடுதிகளில் தங்கி வருகிறோம். முதல்வர் அம்மாவை சந்திக்கக் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக முயற்சித்து வருகிறோம். பூங்குன்றன் அய்யாவைப் பார்த்து விஷயத்தை சொல்லி இருக்கிறோம். அவர் அம்மாவைப் பார்க்க ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருக்கிறார். அதற்காக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருக்கிறோம்” என்றார்
இதுகுறித்து கமுதி ஏஎஸ்பி விக்ரம் கூறியதாவது “ரவிச்சந்திரன் மீது மேற்கண்ட வழக்கு தவிர ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவர் வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தியதாக ஒரு சிபிசிஐடி வழக்கு கூட இருப்பதாகத் தெரிகிறது. அரசியல் பகையில் ஒரு விளையாட்டு வீரரின் மணிக்கட்டுகளை வெட்டி, அவரது வாழ்க்கையை வீணாக்கியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் ரவிச்சந்திரனின் மகன் சரவணன், மருமகன் சக்திவேல் மீது ஏராளமான பழைய வழக்குகள் இருந்ததால் அவர்கள் இருவரை மட்டும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளோம். நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தவர்கள் சட்டரீதியான நிபந்தனைகளை மீறியுள்ளதால் மீண்டும் அவர்களை கைது செய்ய மனு செய்துள்ளோம்” என்றார்.