அரசு நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருப்போருக்கு கிராம கணக்கில் மாறுதல் செய்யப்பட்ட பட்டாக்கள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

அரசு நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருப்போருக்கு கிராம கணக்கில் மாறுதல் செய்யப்பட்ட பட்டாக்கள்: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
Updated on
2 min read

சென்னை: பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் வீடுகளைக் கட்டி குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் கிராமகணக்குகளில் மாறுதல் செய்யப்பட்ட பட்டாக்களை ‘கள ஆய்வில்முதல்வர்’ திட்ட ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல்வேறு வகைப்பாடு செய்யப்பட்ட அரசு நிலங்கள் அத்தகைய உபயோகத்தில் இல்லாமல் நத்தமாக உபயோகத்தில் இருந்து அதில் 10 ஆண்டுகளுக்கு மேலாகவீடுகளைக் கட்டி குடியிருப்போருக்கு அந்நிலங்கள் அரசின் உபயோகத்திற்கு தேவை இல்லை எனில் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர் ஆகியோரைக் கொண்ட குழு அந்த நிலங்களை தணிக்கை செய்து உள்ளாட்சி மன்றங்களில் தீர்மானங்களை பெற்று தகுதியின் அடிப்படையில் குடியிருப்புகளை வரன்முறைப்படுத்த தமிழக அரசால் ஆணையிடப்பட்டது.

மேலும், சென்னை புறநகர் பகுதி,நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லைக்குள் வீட்டுமனை ஒப்படைசெய்ய விதிக்கப்பட்ட தடையாணையும் ஒருமுறை மட்டுமே வரன்முறை செய்து வீட்டுமனை ஒப்படை வழங்கும் திட்டத்துக்கு முன்னர் தளர்வு செய்யப்பட்டது.

மேற்படி அரசாணைகளின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் ஆட்சேபனை உள்ள மற்றும் ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் வீடுகள் கட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்பவருக்கு வீட்டுமனை ஒப்படை வழங்க ஏதுவாகமாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்ட அதிகார அடிப்படையில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

அவ்வகையில், 2000 - 11 காலகட்டங்களில் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்கள் கிராமக் கணக்குகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நத்தம் அடங்கலில் ஏற்றப்படாததால், தங்களால் அதிகாரப்பூர்வமான பரிவர்த்தனை, வங்கி கடன் பெற இயலவில்லை என்றுதொடர்ந்து கோரிக்கைகள் வந்தன.

இவற்றை கவனமாக பரிசீலித்து,பட்டாக்களின் கிராமக் கணக்குகளில் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு, பட்டா வழங்கப்பட்ட விவரங்களை கிராம நத்தம் அடங்கல் மற்றும் வட்ட அலுவலகங்களில் பராமரிக்கப்படும் கணினி மயமாக்கப்பட்ட நத்தம் தரவுகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்என மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

அதன்படி, முதற்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 8,136 பட்டாக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,949 பட்டாக்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 4,411 பட்டாக்களும் என மொத்தம் 16,496 பட்டாக்கள் கிராம கணக்குகளில் மாறுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், மறைமலை நகரில் நேற்று நடைபெற்ற கள ஆய்வில் முதல்வர் திட்ட ஆய்வுக்கூட்டத்தில், 15 பயனாளிகளுக்கு கிராமக்கணக்குகளில் மாற்றம் செய்யப்பட்ட வீட்டு மனை பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 3,256 பட்டாக்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9 பட்டாக்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 197 பட்டாக்களும் என மொத்தம் 3,462 பட்டாக்கள் கிராமக் கணக்குகளில் மாறுதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளும் விரைவில் நிறைவுபெறும்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தா.மோ. அன்பரசன், ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் சிவ்தாஸ்மீனா, பல்வேறு துறை செயலர்கள், ஆட்சியர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in