

மதுரை: குலசேகரபட்டினத்தில் ஏவுதளம் அமைந்தால் விண்கலத்தை ராக்கெட் மூலம் செலுத்துவதற்கான செலவு குறையும் என்று இஸ்ரோ மூத்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையிலுள்ள கே.எம்.ஆர்.இன்டர்நேஷனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குலசேகரபட்டினத்தில் ஏவுதளம் அமைக்க சாத்தியக் கூறு தற்போது உருவாகி இருக்கிறது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் செலுத்துவதற்கான செலவு அதிகமாக உள்ளது. குலசேகரபட்டினத்தில் ஏவுதளம் அமைந்த பின்பு செலவு குறையும். இதனால் ஏராளமான சிறிய ரக ராக்கெட்டுகளை செலுத்த வாய்ப்பு ஏற்படும்.
அதிக அளவிலான வேலை வாய்ப்பு கிடைக்கும். நிலவில் இறங்கியுள்ள சந்திரயான்-3 விண்கலம் உறக்க நிலைக்குச் சென்று விட்ட நிலையில் மீண்டும் செயல்படுவதற்கான வாய்ப்பு குறைவு. வேறு ஏதேனும் நிகழ்வு ஏற்பட்டால் மட்டுமே அது மீண்டும் செயல்பாட்டுக்கு வர வாய்ப்பு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.