Published : 20 Jan 2018 09:44 AM
Last Updated : 20 Jan 2018 09:44 AM

குறைபாடுள்ள குளிர்சாதனப் பெட்டி விற்பனை; வாடிக்கையாளருக்கு ரூ.34,000 திருப்பி அளிக்க வேண்டும்: நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவு

குறைபாடுள்ள குளிர்சாதனப் பெட்டியை விற்பனை செய்த நிறுவனம், அதனை தயாரித்த நிறுவனம் ஆகியவை இணைந்து வாடிக்கையாளர் செலுத்திய ரூ.34 ஆயிரத்தை திருப்பி அளிக்க வேண்டும் என நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த வி.அருள்மொழிச் செல்வன், சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தாக்கல் செய்த மனு:

பிரபல நிறுவனத்தின் 1.5 டன் ஸ்பிலிட் ஏசியை கடந்த 2015 மே 13-ம் தேதி மேற்கு தாம்பரத்தில் உள்ள ஒரு கடையில் வாங்கினேன். அந்த ஏசியை பொருத்திய 2 மாதங்களுக்குப் பிறகு அதன் குளிர்விக்கும் தன்மை குறைந்துவிட்டது. இதுதொடர்பாக புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து ஏசியை பார்வையிட்ட கடைக்காரர், அதை மாற்றித் தருவதாகத் தெரிவித்தார்.

எந்த பதிலும் வரவில்லை

ஆனால், சொன்னபடி ஏசியை மாற்றித் தரவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும், கடைக்காரக்காருக்கும் பலமுறை மின்னஞ்சல் அனுப்பியும் எந்த பதிலும் வரவில்லை. எனவே, ஏசியை வாங்க நான் செலுத்திய தொகையைத் திருப்பி அளிக்கவும், எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் ஏசி தயாரிப்பு நிறுவனம், கடைக்காரருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் கே.ஜெயபாலன், உறுப்பினர் எம்.உயிரொளி கண்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

குறைபாடுள்ள குளிர்சாதனப் பெட்டியை தனக்கு விற்பனை செய்துள்ளதால், தான் செலுத்திய தொகையைத் திருப்பி அளிக்கும்படி மனுதாரர் கோரியுள்ளார். அவரது புகார் உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஏசியின் விலையான ரூ.34,000, அதை பொருத்துவதற்கான கட்டணம் ரூ.1,850-ஐ சம்பந்தப்பட்ட நிறுவனம், கடைக்காரர் ஆகியோர் இணைந்து அளிக்க வேண்டும். மேலும் மனுதாரரின் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரத்தையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x