Last Updated : 30 Jan, 2018 07:20 PM

 

Published : 30 Jan 2018 07:20 PM
Last Updated : 30 Jan 2018 07:20 PM

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு புதன்கிழமை நடை சாத்தல்

 

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு லட்சுமண தீர்த்தக் குளத்தில் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் தெப்ப உற்சவம் நடைபெறுவதை முன்னிட்டு புதன்கிழமை கோயில் நடை சாத்தப்படுகிறது.

ராமேசுவரம் தீவில் அமைந்துள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலுக்குப் புனித பயணம் சென்று கோயிலுக்குள்ளும், கோயிலுக்கு வெளியிலும் அமைந்துள்ள புனித தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமியையும், பர்வதவர்த்தினி அம்பாளையும் தரிசித்து, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள சேதுக்கரை ஆஞ்சநேயரையும் , திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதர், தர்ப்பசயனராமர் மற்றும் தேவிபட்டினத்திலுள்ள நவபாஷாண நவக்கிரகங்களையும் தரிசித்து நமது பாவங்கள் அனைத்தையும் போக்கி விட்டு புத்துணர்வு பெறுவதாக நம்புகிறனர்.

மேலும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலைப் பற்றி திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், தாயுமான சுவாமிகள் ஆகியோர் பாடி போற்றியுள்ளனர். இங்கு மாசி மாதத்தில் மகா சிவராத்திரியும், ஆடி மாதத்தில் திருக்கல்யாணமும், தைப்பூசத்தில் லட்சுமண தீர்த்தத்தில் தெப்பத் திருவிழாவும் முக்கியமான திருவிழாக்கள் ஆகும்.

கலாமும் தெப்பத் திருவிழாவும்

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தனது சுயசரிதையான அக்னிச் சிறகுகளில், ''ராமேசுவரத்தில் நடைபெறும் தெப்பத் திருவிழா வைபவத்தின் போது எனது கொள்ளுத் தாத்தா தெப்பம் கட்டிக் கொடுப்பதுண்டு. அழகு ஜொலிக்கும் தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட ராமர் விக்ரகத்தை அந்தத் தெப்பத்தில் வைத்து, தீர்த்தம் நடுவில் உள்ள மண்டபத்தைச் சுற்றி வலம் வர வைப்பது வழக்கம். அந்தக் குளம் மிக ஆழமானது. அன்றும் இன்றும் ஒட்டு மொத்த ராமேசுவரமுமே அந்த விழாவைக் காணத் திரண்டிருக்கும்.

ஒரு வருடம், அந்தத் தெப்பம் வலம் வரும் காட்சியை என் கொள்ளுத் தாத்தா பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது ஓர் அசம்பாவிதம் நிகழ்ந்தது. ராமர் விக்ரகம் தெப்பத்திலிருந்து கவிழ்ந்து, குளத்தில் மூழ்கிவிட்டது. யாரும் சொல்லாமல், கொஞ்சம்கூடத் தயங்காமல் உடனடியாக என் கொள்ளுத் தாத்தா குளத்தில் குதித்தார். அந்த விக்ரகத்தை மீட்டுக் கொண்டுவந்தார். ராமேசுவரமே அந்தக் காட்சியைக் கண்டு அதிசயித்தது. ஆனந்தமடைந்தது. அந்த ஆண்டிலிருந்து எங்கள் குடும்பத்திற்கு ராமநாதசுவாமி கோயிலில் முதல் மரியாதை அளிக்கும் மரபை ஆலய குருக்கள் ஆரம்பித்து வைத்தார்கள். மேலும் ராமர் விக்ரகம் மீட்கப்பட்டதற்காகவும் எங்கள் குடும்பத்தின்மீது இறைவனின் அருளைப் பொழிய வைத்ததற்காகவும், ராமேசுவரம் மசூதியில் விசேஷத் தொழுகை நடைபெற்றது, என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்டிபகலிங்க பூஜையும், தொடர்ந்து 5 கால பூஜைகளும் நடைபெறும்.

நடை சாத்தல்

காலை 7 மணியளவில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி லெட்சுமணேசுவரர் கோயிலுக்கு எழுந்தருளுகின்றனர். 11 மணியளவில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்பாளும் வலம்வருகின்றனர்.

தெப்ப திருவிழாவுக்காக ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடானதும் காலை 7 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். அதன்பின்னர் கோயில் தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சாயரட்ஜை பூஜைகள் செய்யப்பட்டு இரவு 7 மணியளவில் அக்னி தீர்த்தக்கடலில் ராமநாதசுவாமி புறப்பாடாகி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலில் கிரகண அபிஷேகமும், பள்ளியறை பூஜையும் நடைபெறும். இதற்கான பணிகளை ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையாளர் மங்கையர்க்கரசி தலைமையிலான பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x