மருந்து உற்பத்தி, இறக்குமதியில் வரி ஏய்ப்பு நடந்ததாக புகார்: பார்மா நிறுவனங்களில் வருமான வரி துறை சோதனை

மருந்து உற்பத்தி, இறக்குமதியில் வரி ஏய்ப்பு நடந்ததாக புகார்: பார்மா நிறுவனங்களில் வருமான வரி துறை சோதனை
Updated on
1 min read

சென்னை: மருந்து உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, சென்னையில் அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் மருந்து, ரசாயன பொருட்கள் உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யும் சில நிறுவனங்கள் தங்களது வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, அந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் கடந்த காலங்களில் வருமான வரித் துறையில் அவர்கள் தாக்கல் செய்த ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கண்காணித்தனர். அப்போது, அந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததற்கான முகாந்திரம் இருப்பதை வருமான வரித் துறையினர் கண்டறிந்தனர்.

இந்நிலையில், சென்னையில் மருந்து, ரசாயனம் உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யும் 5 நிறுவனங்கள் தொடர்புடைய 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

அந்த வகையில், கவர்லால் குழுமத்தின்கீழ் செயல்படும் காவ்மன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தொழிற்சாலை, கிடங்குகளில்.. மருந்து பொருட்கள் தயாரிக்கும் இந்நிறுவனத்தின் தொழிற்சாலை, கிண்டியில் உள்ள அலுவலகம் மற்றும் கிடங்குகளிலும் சோதனை நடந்தது.

அதேபோல, வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து, தமிழகம் முழுவதும் விநியோகம் செய்து வரும் மனிஷ் குளோபல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக மாதவரம் நடராஜன் நகர் பகுதியில் உள்ள கிடங்கிலும், மாதவரம் ரவுண்டானாவில் உள்ள மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான ஆதீஸ்வரர் எக்ஸ்பியன் என்ற நிறுவனத்திலும் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும், சென்னை ஆயிரம் விளக்கு, எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ஸ்கோப் இன்கிரிடியன்ட்ஸ் நிறுவனம் மற்றும் வேப்பேரி, பூங்கா நகர், சவுகார்பேட்டையில் உள்ள மற்றொரு நிறுவனத்தின் அலுவலகங்கள், வணிக வளாகங்கள் என 5 நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில், வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

100 அதிகாரிகள்: சென்னையில் 30 இடங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகுதான், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரங்கள் தெரியவரும் என்று வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in