Last Updated : 21 Jan, 2018 07:53 AM

 

Published : 21 Jan 2018 07:53 AM
Last Updated : 21 Jan 2018 07:53 AM

கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் 130 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை: சர்வதேச விண்வெளி வர்த்தகத்தில் தடம் பதிக்கும் இந்தியா

சர்வதேச விண்வெளி வர்த்தகத்தில் தடம் பதிக்கும் விதமாக கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் 130 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

1969-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உலக அளவில் சிறந்த 10 விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. நாட்டின் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்துதல், இயற்கை வளங்களை கண்காணித்தல், விண்வெளி ஆராய்ச்சி போன்ற பயன்பாடுகளுக்காக செயற்கைக்கோள்களை தயாரித்து இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

அதேசமயம், தன்னுடைய நிதி தேவையை பூர்த்தி செய்வதற்காக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் நம்முடைய ராக்கெட் மூலம் இஸ்ரோ வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தி வருகிறது. இதற்காக, ‘ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனம் இஸ்ரோவின் வர்த்தக பிரிவாக செயல்படுகிறது. இந்நிறுவனம் வெளிநாட்டு நிறுவனங்களுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தும் பணியை இஸ்ரோ கடந்த 1999-ம் ஆண்டில் இருந்து செய்து வருகிறது. இதுவரை 237 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை இஸ்ரோ நம்முடைய ராக்கெட்கள் மூலம் வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தி உள்ளது.

ஒரே ஆண்டில் 130

குறிப்பாக, கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் 19 நாடுகளைச் சேர்ந்த 130 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி உள்ளது. இதில், 106 செயற்கைக் கோள்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக இத்தாலி, பெல்ஜியம், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சொந்தமான தலா 3 செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, இஸ்ரேல், கஜகஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், லட்வியா, சிலி, ஜெர்மனி, பின்லாந்து, ஆஸ்திரியா, ஸ்லோவாக்யா, லித்துவேனியா, பிரான்ஸ், செக் குடியரசு ஆகிய 15 நாடுகளுக்குச் சொந்தமான தலா ஒரு செயற்கைக் கோள்களையும் இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தி உள்ளது.

முன்னதாக, 2016-ல் 22 வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் 2015-ல் 17 வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி உள்ளது. இதன்படி, முதல்முறையாக 130 வெளிநாட்டு செயற்கைக் கோள்களை ஒரே ஆண்டில் விண்ணில் செலுத்தி இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது. இதன்மூலம், சர்வதேச விண்வெளி வர்த்தகத்தில் இந்தியா தடம் பதித்துள்ளது.

குறைந்த கட்டணம்

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ தனது பிஎஸ்எல்வி ராக்கெட்டை பயன்படுத்தி வருகிறது. இதுவரை 42 பிஎஸ்எல்வி ராக்கெட்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 40 ராக்கெட்கள் வெற்றியை தந்துள்ளன. இதனால், இந்த ராக்கெட் உலக அளவில் மிகுந்த நம்பத்தன்மையை பெற்றுள்ளது.

மேலும், செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த அமெரிக்கா, ரஷ்யா போன்ற முன்னணி நாடுகளைக் காட்டிலும் இந்தியா குறைந்த கட்டணமே வசூலிக்கிறது. இதன் காரணமாக வெளிநாட்டு நுகர்வோர்கள் இந்தியாவை அதிகம் தேடி வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பயன்கள் என்ன?

வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் மைக்ரோ மற்றும் நானோ வகையைச் சேர்ந்த சிறிய ரக செயற்கைக் கோள்கள் ஆகும். இவற்றை நம்முடைய பிரதான பெரிய செயற்கைக் கோளுடன் சேர்த்து ஒரே ராக்கெட்டில் செலுத்தும்போது ராக்கெட்டின் உற்பத்தி செலவு குறையும். வருவாயும் கிடைக்கும். இந்த வருவாயை கொண்டு இஸ்ரோ தனது விண்வெளி ஆராய்ச்சி பணிகளை இன்னும் தீவிரப்படுத்த முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x