சித்தா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசிடம் கோரிக்கை; திருச்சியில் அமைக்க இடம் தேர்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சித்தா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசிடம் கோரிக்கை; திருச்சியில் அமைக்க இடம் தேர்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Updated on
1 min read

சென்னை: திருச்சியில் சித்தா எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரையில் ஓமியோபதி கல்லூரி: தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு பல்வேறுசிறப்பான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. சித்தா மற்றும் ஆயுர்வேதா மருத்துவ கட்டமைப்புகள் தொடர்ச்சியாக மேம்படுத்தப்படுகிறது. மதுரையில் பெரியஅளவிலான ஓமியோபதி கல்லூரிகட்டும் பணியும் தொடங்கப்படஉள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை போன்று சித்தா எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்ற கோரிக்கைமத்திய அரசிடம் வைக்கப்பட்டுள்ளது. அப்படி கிடைக்கும்பட்சத்தில் அந்த மருத்துவமனை திருச்சியில் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே ஒருசில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பு முதல்வரிடம் உள்ளது. சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தில் வேந்தராக முதல்வரும், இணைவேந்தராக அந்தத் துறையின் அமைச்சரும் இருப்பார்கள். துணைவேந்தரை முதல்வர் நியமிப்பார் என்று சட்டதிட்டங்கள் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.மத்திய ஆயுஷ் அமைச்சரிடம் இதுதொடர்பாக வலியுறுத்தப்பட்டுஉள்ளது.

சித்த மருத்துவ பல்கலைக்கழகத்துக்காக 25 ஏக்கர் பரப்பளவில் மாதவரம் பால் பண்ணையில்இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடக்கவிழா நடைபெறும்.

சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் இதுவரை 45,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர். கட்டண சிகிச்சை பிரிவுவிரைவில் தொடங்கி வைக்கப்படும். சென்னை மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை திறக்க முதல்வர், மத்திய அமைச்சரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தியாவிலேயே முதல் முதியோருக்கான மருத்துவமனை இங்கு திறந்து வைக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in