Published : 07 Jul 2014 10:22 AM
Last Updated : 07 Jul 2014 10:22 AM

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரி ஜுலை 12ல் பேரணி- கவிஞர் வைரமுத்து பேட்டி

தமிழக பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் பேரணி ஜுலை 12-ம் தேதி நடைபெறும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

கோவையில் வெற்றி தமிழர் பேரவை சார்பில் கவிஞர்கள் திருநாள் மற்றும் கலை இலக்கியத் திருவிழா ஜுலை 12, 13-ம் தேதிகளில் கொடிசியா அரங்கில் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியுடன் கவிஞர் வைரமுத்துவின் மணிவிழா மற்றும் பத்மபூஷன் விருதுக்கான பாராட்டு விழாவும் நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து கோவையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

கோவையில் ஜுலை 12-ம் தேதி தமிழ் நடை என்ற பெயரில் சிவானந்த காலனியில் இருந்து காந்திபுரம் வரை பேரணி நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டு எல்லைக்குள் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும். நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். மதச்சார்பற்ற அரசுக்கு மதச்சார்பற்ற நூல் கட்டாயம் என்ற நிலையில் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணி நடத்தப்படுகிறது.

இதற்கு அடுத்தபடியாக, ஜுலை 13-ம் தேதி காலை 10 மணிக்கு கவிஞர்கள் திருநாள் கலை இலக்கிய திருவிழா நடைபெற உள்ளது.

இதில் வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.

கலை இலக்கிய கருத்தரங்கிற்கு சக்தி நிறுவனங்களின் தலைவர் நா.மகாலிங்கம் தலைமை வகிக்கிறார். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் முதன்மை விருந்தினராகப் பங்கேற்கிறார். மலேசிய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் டத்தோ சரவணன், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசி விமலா ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர்.

இதில், கள்ளிக்காட்டு இதிகாசம் குறித்து கம்பம் பெ.செல்வேந்திரன், கருவாச்சி காவியம் குறித்து முனைவர் பர்வீன் சுல்தானா, மூன்றாம் உலகப் போர் குறித்து த.ஸ்டாலின் குணசேகரன், ஆயிரம் பாடல்கள் குறித்து மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் பேசுவர். இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

நிகழ்ச்சியில், கவிஞர்கள் திருநாள் விருது கவிஞர் கல்யாண்ஜிக்கு வழங்கப்படுகிறது. மேலும் புத்தக வெளியீடு, மரக்கன்று போன்ற நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. இந்த விழாவானது தமிழின் தொன்மையை உயர்த்திப் பிடிக்கின்றதாக இருக்கும். தனி நபர் புகழ்பாடும் வகையில் இருக்காது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x