Published : 18 Oct 2023 04:08 AM
Last Updated : 18 Oct 2023 04:08 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் இட்லி, சாம்பாரில் புழு இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, தாமதமாக உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்ததால் குறைகளை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் பிரபல தனியார் உணவகம் செயல்படுகிறது. இந்த உணவகத்தில் நேற்று முன்தினம் இரவு 2 பேர் வாங்கி சென்ற இட்லி, சாம்பாரில் ‘புழு’ இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், உணவக நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். அப்போது, இரண்டு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், குற்றஞ்சாட்டிய 2 பேருக்கும் மிரட்டல் விடுக்கப் பட்டதாகவும், இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவண்ணாமலை காவல்துறையினரும், உணவக நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, உணவக பெயருடன் இட்லி, சாம்பாரில் இருந்த புழுவை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில், பிரபல தனியார் உணவகத்தில், உணவு பாதுகாப்புத் துறையினர் நேற்று பிற்பகலில் ஆய்வு செய்துள்ளனர். சமையலறை, உணவு வைக்குமிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். இவர்களது ஆய்வில், குறைகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இட்லி சாம்பாரில் புழு என்ற பிரச்சினை நேற்று முன்தினம் எழுந்த நிலையில்,
உணவு பாதுகாப்புத் துறை ஆய்வுக்கு வரும் என முன் கூட்டியே கணித்து, சமையலறை உட்பட அனைத்து இடங்களையும் சுகாதாரமாக வைத்துள்ளனர். இவர்களுக்கு கால அவகாசம் வழங்குவதுபோல், உணவு பாதுகாப்புத் துறையினரும் துரிதமாக சென்று ஆய்வு செய்யாமல், நிதானமாகவும் மிக தாமதமாகவும் சென்று ஆய்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT