Published : 17 Oct 2023 05:16 AM
Last Updated : 17 Oct 2023 05:16 AM
சென்னை: உயர்த்தப்பட்ட நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும், பீக் ஹவர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் சென்னையில் நடைபெற்றது.
430 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலை கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். அதேபோல், உயர்த்தப்பட்ட 25 சதவீத பரபரப்பு நேர (பீக் ஹவர்) கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். சோலார் மேற்கூரை அமைப்பதற்கான நெட்வொர்க் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். பல்முனை ஆண்டுக்கான கட்டணத்தை உடனடியாக ரத்து செய்வதோடு, 2 ஆண்டுகளுக்கு மின்கட்டணம் உயர்த்துவதை தவிர்க்க வேண்டும். 12 கிலோவாட் வரை மின்சார இணைப்பு பெற்றுள்ள குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 3பி-யில் இருந்து 3ஏ1 நடைமுறைக்கு மாற்ற வேண்டும் ஆகிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கடந்த மாதம் ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அறிவித்தன. தொடர்ந்து கடந்த மாதம் 25-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதையடுத்து, தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் கிண்டியில் உள்ள குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழிற்சங்க பிரநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, 12 கிலோவாட் வரை மின்சார இணைப்பு பெற்றுள்ள குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 3பி-யில் இருந்து 3ஏ1 என்ற பழைய நடைமுறைக்கு மாற்றப்பட்டது. மற்ற 4 கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபால், ஜேம்ஸ் ஆகியோர் கூறியதாவது: எங்களது 5 அம்ச கோரிக்கைகளில் ஒரு கோரிக்கை மற்றும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. அடுத்தக் கட்டமாக நவ.6-ம் தேதி சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து வலியுறுத்த உள்ளோம். டிச.4-ம் தேதி தொழில்முனைவோரும், தொழிலாளர்களும் இணைந்து மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவோம். டிச.18-ல் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT