

கோவை: கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் செயற்கை (சிந்தெடிக்) ஓடுதளம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இத்தளத்தை விரைவில் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் அமைந்துள்ள நேரு ஸ்டேடியம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இம்மைதானத்தில் 400 மீட்டர் நீளத்தில் ஓவல் வடிவ ஓடுதளம் உள்ளது. தினமும் காலை நேரத்தில் சராசரியாக 300 வீரர்களும், மாலை நேரத்தில் 400 வீரர்களும் ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம் போன்ற தடகளப் போட்டிகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
அரசுத் துறைகள் சார்பிலும், பல்வேறு விளையாட்டு சங்கங்கள் சார்பிலும் இம்மைதானத்தில் சுழற்சி அடிப்படையில் தொடர்ச்சியாக தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்மைதானத்தில் வீரர்கள் சர்வதேச தரத்தில் ஓட்டப் பயிற்சி பெற ஏதுவாக, கடந்த 2008-ம் ஆண்டு செயற்கை ஓடுதளம் அமைக்கப்பட்டது.
பல ஆண்டுகள் ஆகி விட்டதால், செயற்கை ஓடுதளம் ஆங்காங்கே சேதமடைந்தது. இதனால் ஓட்டப் பந்தய வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் இடையூறுகள் ஏற்பட்டன. இதனை சீரமைத்துத் தர வீரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் ரூ.6.67 கோடி மதிப்பில் புதிய செயற்கை ஓடுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த டிசம்பரில் பணிகள் தொடங்கின. தற்போது, இப்பணி நிறைவடைந்து விட்டது. சீரமைப்பு செய்யப்பட்ட செயற்கை தளத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து,பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என வீரர், வீராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டு அலுவலர் ரகு கூறும்போது, ‘‘செயற்கை ஓடுதளம் அமைக்கும் பணி நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட விரைவாக முடிக்கப் பட்டுள்ளது. தற்போது, பணியை மேற்கொண்டுள்ள நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்ட செயற்கை ஓடு தளத்தின் மாதிரி சேகரிக்கப்பட்டு இந்திய தடகள கூட்டமைப்புக்கு ஆய்வு மற்றும் ஒப்புதலுக்காக அனுப்பப் பட்டுள்ளது. விரைவில் செயற்கை ஓடுதளம் வீரர், வீராங்கனைகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்,’’ என்றார்.