Published : 17 Oct 2023 04:06 AM
Last Updated : 17 Oct 2023 04:06 AM
சேலம் / நாமக்கல்: அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் இரண்டு மாதத்தில் நடைமுறைக்கு வரும், என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடு, மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பணிகள், பயனாளிகள் விவரம், பொது விநியோக முறையில் உள்ள குளறுபடிகள் குறித்து தனித்தனியே அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசியது: திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போன்று பொது விநியோகத் திட்டத்தை சீரமைத்து மக்களுக்கு தரமான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அனைத்து ரேஷன் கடைகளிலும் கருப்பு மற்றும் பழுப்பு அரிசிகளை நீக்கி தரமான அரிசி வழங்கப்பட்டுள்ளது.
புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை 14 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு நகல் பெறுவதற்கு தபால் மூலம் விண்ணப்பித்தாலே போதும். ஆன்லைன் மூலம் குடும்ப அட்டை நகல் வழங்கும் சிறப்பு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அவ்வப்போது செயல் இழப்பதால் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில், இரண்டு மாதங்களில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக 36,000 ரேஷன் கடைகளில் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு வர முடியாத மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் 3 லட்சம் பேருக்கு இருக்கும் இடத்திலேயே ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 103 திறந்த வெளி நெல் அடுக்கு மையங்கள் தற்போது பாதுகாக்கப்பட்ட 211 இடங்களில் குடோன்களாக அமைக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் 4 லட்சம் மெட்ரிக் டன் உணவுப் பொருட்கள் அடுக்கி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நாமக்கல்லில் ஆய்வுக் கூட்டம்: நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பொது விநியோகத் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்துப் பேசியதாவது: மழைக் காலங்களில் திறந்த வெளி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேதமடைவதைத் தடுக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்து கொள்முதல் நிலையங்கள் கட்டப் பட்டு வருகிறது. அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் திறந்த வெளி நெல் கொள்முதல் நிலையங்களே இல்லாத நிலை ஏற்படும். கண் கருவிழி சரிபார்ப்பு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்குவதன் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 13,167 பேர் பயன் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், கூட்டத்தில், எம்பிக்கள் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், ஏ.கே.பி.சின்ராஜ், எம்எல்ஏக்கள் பெ.ராமலிங்கம், கு.பொன்னுசாமி, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலர் ஹர்சஹாய்மீனா, ஆட்சியர் ச.உமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT