Published : 17 Oct 2023 04:08 AM
Last Updated : 17 Oct 2023 04:08 AM
ஈரோடு: தனியார் நிர்வாகிக்கும் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உண்டியல் வைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் தென் முகம் வெள்ளோடு சாத்தந்தை குலமக்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் முத்துசாமி, செயலாளர் கண்ணுசாமி, பொருளாளர் பொன்னுசாமி ஆகியோர் தலைமையிலான நிர்வாகிகள், ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவிடம் அளித்த மனு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் தென்முகம் வெள்ளோடு கிராமத்தில், ராசா சுவாமி நல்ல மங்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது.
தென் முகம் வெள்ளோடு சாத்தந்தை குலமக்களிடம் இருந்து நன்கொடை பெற்று, 3.19 சென்ட் நிலம் வாங்கி இந்த கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் புதிய சிலைகளை பிரதிஷ்டை செய்து, கடந்த 7 ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகிறோம். எங்களது கோயிலுக்கு தென்புறத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள பழைய ராசா சுவாமி கோயில் உள்ளது.
நாங்கள் புதியதாக கட்டியுள்ள இந்த கோயிலுக்கும், அறநிலைய துறையினருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், எங்கள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், எங்களிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல், உண்டியல் வைக்க முயற்சித்தனர். இது சட்டப்படி தவறானதாகும்.
தென்முகம் வெள்ளோடு சாத்தந்தை குலம், கொங்கு வேளாளர் மக்களுக்கு மட்டுமே இந்த கோயில் மீது உரிமை உள்ளது. மேலும், இந்த கோயில் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், எங்களது கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை உண்டியல் வைக்கும் முயற்சியை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவை தலைவர் மணி, முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, மொடக்குறிச்சி ஒன்றிய அதிமுக செயலாளர் கதிர்வேல் உள்ளிட்டோர் கொங்கு கலையரங்கில் இருந்து ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். கோயில் ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா உறுதி அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT