Published : 17 Oct 2023 04:10 AM
Last Updated : 17 Oct 2023 04:10 AM
ஓசூர்: ஓசூர் சானமாவு பகுதியில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டா நிலப்பிரச்சினை தொடர் பாக இருதரப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், பதற்றம் ஏற்பட்டது. அதிகாரிகள் தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுத்தினர்.
ஓசூர் அருகே சானமாவு கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க அப்பகுதியில் உள்ள கெம்பையா என்பவருக்குச் சொந்தமான 2.38 ஏக்கர் நிலத்தை அரசு விலைக்கு வாங்கியது. பின்னர் 1998-ம் ஆண்டு பட்டியலின மக்கள் 41 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப் பட்டது.
இந்நிலையில், கடந்த 1999-ம் ஆண்டு கெம்பையாவின் வாரிசுகள் அந்த நிலத்தை தங்களுக்குத் திரும்ப வழங்க வேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை எதிர்த்து அரசு சார்பிலும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 24 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் அரசு ஒதுக்கிய இலவச வீட்டுமனைகளை பட்டியலின மக்களுக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், பட்டியலின மக்களுக்கு நிலத்தைப் பிரித்து வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று அரசு ஒதுக்கிய நிலத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், மாவட்ட தலைவர் ஆனந்த குமார் ஆகியோர் தலைமையில் பயனாளிகள் வீடு கட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு கெம்பையாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து நிலத்தில் திரண்டனர். மேலும், இருதரப்பினரும் நிலத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, டிஎஸ்பி முரளி தலைமையில் 70 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
சூளகிரி வட்டாட்சியர் சக்திவேல் தலைமையிலான வருவாய்த் துறையினர் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இது தொடர்பாக கொம்பையாவின் குடும்பத்தினர் கூறும்போது, “இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதுவரை இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்றனர்.
பயனாளிகள் கூறும்போது, “உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தங்களை வீடு கட்ட அனுமதிக்க வேண்டும்” என்றனர். இதையடுத்து, நவ.10-ம் தேதிக்குள் வீடு கட்ட முறையான அனுமதி வழங்கப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து, பயனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT