

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் சுரங்கப் பாலங்கள், ஆற்று முகத்துவாரங்கள் உள்ளிட்ட 44 இடங்களில் வெள்ள நிலையை அறிய அடி அளவீடுகள் வரையப்பட்டுள்ளன. தமிழகத்தில் அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இக்காலத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாகச் சென்னை மாநகரம் உள்ளது. அதனால் பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
சமையல் கூடங்கள், நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மரம் அறுவைஇயந்திரங்கள், டீசல் இன்ஜின்கள் போன்றவை முறையாக இயங்குகிறதா என மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மாநகரில் வெள்ளம் ஏற்படும் அளவை கணக்கிட ஏதுவாக பல்வேறு இடங்களில் அடி அளவீடுகளை மாநகராட்சி நிர்வாகம் வரைந்து வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் பருவமழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளத்தின் அளவை கணக்கிடுவதற்காக ஏற்கெனவே 21 சுரங்கப் பாதைகள், 21 கால்வாய்கள், கூவம் மற்றும் அடையாற்றின் கண்காணிப்பு கேமராக்கள், உணர் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.
மேற்கூறிய பகுதிகளில் வெள்ள நீர்தேக்கம் தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பார்க்க முடியும். ஆனால், தற்போது எவ்வளவு உயரத்தில் வெள்ள நீர் உள்ளது, எவ்வளவு உயரத்துக்கு வெள்ளநீர் தேங்கினால் அபாயகரமானது போன்றவற்றைக் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அறிய முடியவில்லை.
இதைக் கருத்தில் கொண்டு, மேற்கூறிய 42 இடங்களில், கண்காணிப்பு கேமராவில் தெரியும்படி, அடி அளவீடு வரையப்பட்டுள்ளது. இதன்மூலம் அப்பகுதியில் தேங்கும் நீர் அபாய அளவை எட்டும்போது, கண்காணிப்பு கேமராவில் பார்த்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள தொழிலாளர் செயலி (Workforce App) வழியாக எச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்படும்.
அதனைத் தொடர்ந்து மண்டல மற்றும் வார்டு பொறியாளர்கள், சுரங்கப் பாலங்களில் இருந்து வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள், போக்குவரத்துக்கு தடை விதிப்பது, ஆறுகள் மற்றும் கால்வாய்களில் வெள்ளம் அபாய கட்டத்தை எட்டினால் கரையோர மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.