

சென்னை: கோயம்பேடு உணவு தானிய வளாகத்தில் நாளை (அக்.18) ஆயுத பூஜை சிறப்பு சந்தை திறக்கப்படுகிறது. கோயம்பேடு சந்தையில் ஆண்டுதோறும் பொங்கல், விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை ஆகிய விழாக் காலங்களில், பண்டிகைகளுக்குத் தேவையான பூஜை பொருட்களை மலிவு விலையில் ஒரே இடத்தில் வாங்க, மலர் சந்தை வளாகத்தில் சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். இந்த சந்தை, கோயம்பேடு சந்தை நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்பட்டு, ஒப்பந்ததாரர் மூலமாக நடத்தப்பட்டு வந்தது.
கோயம்பேடு சந்தை பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள், சாலை பணிகள் நடைபெற்று வருவதால், தற்போது ஏலம் விட்டு ஒப்பந்ததாரர் மூலமாக நடத்தாமல், சந்தை நிர்வாகமே நேரடியாக நடத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி, கோயம்பேடு உணவு தானிய வளாகத்தில் ஆயுதபூஜை சிறப்பு சந்தை நாளை திறக்கப்படுகிறது. இந்த சந்தையில் பொரி, கடலை, வாழைப்பழம், வாழைக் கன்று, வாழை இலை, கரும்பு, ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை உள்ளிட்ட பழவகைகள் மற்றும் மல்லி, ரோஜா, முல்லை, சாமந்தி உள்ளிட்ட மலர் வகைகள், மலர் மாலைகள் உள்ளிட்டவை மொத்த விலையிலும், சில்லறை விலையிலும் விற்கப்பட உள்ளன.
இந்த சந்தை வரும் அக்.27-ம் தேதி வரை செயல்பட உள்ளது. மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், திருட்டைத் தடுக்கவும் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க காவல் துறைக்கு சந்தை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.