Published : 17 Oct 2023 07:00 AM
Last Updated : 17 Oct 2023 07:00 AM

சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட திட்டப் பணிகளை முதல்வர் இன்று ஆய்வு

சென்னை: சென்னை, காஞ்சி, திருவள்ளூர்,செங்கல்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

‘மக்களுக்காகத்தான் அரசு, மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு. அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மன நிறைவுடன் திரும்பிச்செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்’ என முதல்வர் அறிவித்திருந்தார்.

‘கள ஆய்வில் முதல்வர்’ - அதன் தொடர்ச்சியாக, 'கள ஆய்வில் முதல்வர்' என்ற புதிய திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம்தொடங்கி வைத்த முதல்வர், பிப்.1, 2-ம் தேதிகளில் வேலூர்மண்டலத்தில் உள்ள வேலூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் அரசு திட்டங்களை ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர், வடமாவட்டங்களில் தற்போது ஆய்வு நடத்த உள்ளார். இதையொட்டி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான கள ஆய்வில் முதல்வர் திட்ட ஆய்வுக்கூட்டம் இன்றும் நாளையும், மறைமலைநகரில் உள்ள ஊரக வளர்ச்சி மாநில நிறுவனத்தில் நடைபெறுகிறது.

இதில், பங்கேற்பதற்காக முதல்வர் இன்று காலை 11 மணிக்குஅங்கு புறப்பட்டுச் செல்கிறார். வழிநெடுக பல்வேறு பணிகளை பார்வையிடும் அவர், மதிய உணவுக்குப் பிறகு ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து, மாலை 4 மணிக்கு, ஐஜிக்கள், டிஐஜிக்கள், மாவட்ட காவல் எஸ்.பி.க்கள், சென்னை காவல் ஆணையர் தவிர்த்து தாம்பரம், ஆவடி காவல்ஆணையர்கள் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

அதன்பிறகு நாளை காலை 9.30 மணிக்கு, 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் தவிர்த்து இதர மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டத்தில், அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகள், வேளாண்மை, கிராமப்பகுதி மேம்பாடு, நகர்ப்பகுதி வளர்ச்சி,வாழ்விட மேம்பாடு, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, சமூக நலன், இளைஞர்கள், மாணவர்களுக்கு திறன் பயிற்சி, பொதுவான கட்டமைப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்கிறார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதுடன் பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்குகிறார்.

இக்கூட்டத்தில், மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் உட்பட துறைகளின் அமைச்சர்கள், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, துறைகளின் செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x