

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தால் அதன் மீது நடவடிக்கை எடுப்பதை விட, அலைக்கழிப்பதையே கோட்டாட்சியர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார் என மனுதாரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரே, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. கோட்டாட்சியர் மற்றும் கோட்ட நிர்வாக நடுவராகவும் இருப்பவர் பவித்ரா. கள்ளக்குறிச்சி கோட்டத்துக்கு உட்பட்ட குடியிருப்பு வாசிகள் நிலம் தொடர்பான பிரச்சினை, கோயில் பிரச்சினை மற்றும் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிப்பது வாடிக்கை.
கோட்டாட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்கும் பட்சத்தில், விரைவில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் மனு அளிக்கின்றனர். ஆனால் அதனை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதில் போதிய கவனம் செலுத்துவதில்லை, தீர்வு ஏற்படுத்தாதற்கான காரணத்தை தெரிவிப்பதுமில்லை என பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக கள்ளக்குறிச்சி வட்டத்துக்கு உட்பட்ட கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, தனது பட்டா இடத்தின் வில்லங்கம் தொடர்பாக 'தமிழ் நிலம்' இணையத்தில் திருத்தம் வேண்டும் எனக் கோரி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மனு அளித்துள்ளார். அவரது மனுவை பரிசீலிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
இது தொடர்பாக மனுதாரர் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. கள்ளக்குறிச்சி வட்டத்துக்கு உட்பட்ட பிரித்விமங்கலம் கிராமத்தில் அரசு வழங்கிய இடத்தைஅளவீடு செய்து, தனி பட்டாவழங்கக் கோரி கடந்த ஒராண்டாகஅப்பகுதி மக்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தும் அதன்மீதும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இது போன்று பல்வேறு தரப்பினர் அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் போதிய கவனம் செலுத்தாமல் அலைக் கழிப்பதையே கோட்டாட்சியர் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். விசாரணை என்ற பெயரில் நாள்முழுக்க அலுவலக வாயிலில் காத்திருக்க செய்வதும் தொடர் கதையாக உள்ளது என மனுதாரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே கடந்த ஜூலை மாதம் தியாக துருகம் அருகில் உள்ள எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் பட்டா திருத்தம் செய்வதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் தனக்கு சாதகமாக செயல்படும் வகையிலும், பட்டாவில் திருத்தம் மேற்கொள்ளவும் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலக ஊழியரை மணி அணுகியுள்ளார். இதற்கு அந்த ஊழியர் ரூ.10 ஆயிரம் கையூட்டு பெற்றுள்ளார்.
அந்த ஊழியரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர். இது போன்று பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆண்டுக் கணக்கில் அலைக் கழிப்பதும், பல்வேறு அரசியல் மற்றும் அதிகாரிகள் பரிந்துரையோடு நேரில் சந்தித்து கேட்டாலும் செக் செய்துவிட்டு கூறுகிறேன் என்று கோட்டாட்சியர் கூறுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக கோட்டாட்சியர் பவித்ராவை தொடர்புக் கொண்டபோது, "பரவலாக எந்த கோப்பும்நீண்ட கால நிலுவை வைப்பதில்லை. என்னிடம் எதுவும் நிலுவையில் இல்லை. மாறாக மனு தொடர்பான கோப்புகள் அடிப்படையில் சில நேரங்களில் காலதாமதம் ஏற்படும்" என்றார். ஊழியர் ரூ.10 ஆயிரம் கையூட்டு பெற்றதால் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.