

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் விளை நிலங்களை சூழ்ந்த வெள்ளம் இன்னும் வடியவில்லை. இதனால் வாழை, தென்னை, மரச்சீனி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 14-ம் தேதி இரவிலிருந்து விடிய விடிய கனமழை பெய்தது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. சிற்றாறு1 அணை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் முழுவதும் திறந்து விடப்பட்டது.
இதனால் முக்கிய ஆறுகளான பரளியாறு, தாமிரபரணி ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.திற்பரப்பு அருவியிலும் காட்டாற்று வெள்ளம் கொட்டியதால் நேற்று 5-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. கால்வாய்களும் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
குளங்கள் நிரம்பின: நேற்று முன்தினம் முதல் மழையின் தாக்கம் குறையத் தொடங்கியது. ஆனாலும் வெள்ளத்தின் அளவு குறையவில்லை. மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன குளங்களும் நிரம்பி விட்டன. மாவட்டத்தில் அதிக பட்சமாக சிற்றாறு 2 அணை பகுதியில் 34.2 மி. மீ., சிற்றாறு 1 அணை யில் 24.6 மி. மீ., பெருஞ்சாணி அணை பகுதியில் 19.8 மி. மீ., மழை பதிவாகி உள்ளது.
48 அடி உயரம் கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 37.84 அடியாகவும், 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 66.60 அடியாகவும் உள்ளது. சிற்றாறு1 மற்றும் சிற்றாறு2 அணைகளில் நீர்மட்டம் உச்ச அளவை எட்டி உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,451 கன அடி, பெருஞ்சாணி அணைக்கு 1,180 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சிற்றாறு1 அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் பழையாறு, வள்ளியாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மழை குறைந்த போதும் வெள்ளத்தின் சீற்றம் குறையவில்லை. திக்குறிச்சி, முன்சிறை பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி உள்ளனர். மழை பெய்யும் போதெல்லாம் அங்கு இதே நிலை ஏற்படுகிறது.
மழைக்கு விளவங்கோடு தாலுகாவில் 5 வீடுகளும், திருவட்டாறில் 4 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன. சிதறால் மலைக்கோயிலை அடுத்த திக்குறிச்சி ஏலா பகுதியில் 40 ஏக்கர் விவசாய நிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வாழை, மரச்சீனி, தென்னை உள்ளிட்ட பயிர்கள் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திக்குறிச்சி பகுதியில் முல்லையாற்றின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு வயல் வெளிகளில் வெள்ளம் செல்கிறது. இதனால் பயிர்கள் சேதமடைந்து இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை வெள்ளம் வடியாத நிலையில் தேசமடைந்த பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.