Published : 20 Jan 2018 10:24 AM
Last Updated : 20 Jan 2018 10:24 AM

வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசிய இயக்குநர் பாரதிராஜா மீது போலீஸில் புகார்

கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக பேசிய திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஆண்டாள் குறித்து சில கருத்துகளை அவர் வெளியிட்டார். ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்ததால் அவர் வருத்தம் தெரிவித்தார். இருப்பினும் வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

அச்சுறுத்தும் வகையில்

இப்பிரச்சினையில் வைரமுத்துவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் பாராதிராஜா நேற்று முன்தினம் பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா மீது வடபழனி காவல் நிலையத்தில் இந்து மக்கள் முன்னணி சார்பில் அதன் மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் நேற்று காலை புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், “விநாயகரை இறக்குமதி செய்த கடவுள் என்றும், ஆண்டாளை மிக மோசமாக விமர்சித்த கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக போராடும் இந்துக்களை அச்சுறுத்தும் வகையில், ‘நாங்களும் ஆயுதம் எடுப்போம். வன்முறையில் ஈடுபடவும் தயங்க மாட்டோம். வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்பட்டால் தலை எடுக்கவும் தயங்கமாட்டோம்’ என்று பாரதிராஜா கூறியுள்ளார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனவே, சம்பந்தப்பட்ட இயக்குநர் பாரதிராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வடபழனி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x