

மவுலிவாக்கம் கட்டிட விபத்து மீட்புக் குழுவினருக்கு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நாளை தமிழக அரசு பாராட்டு விழா நடத்துகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மவுலிவாக்கத்தில் தனியாரால் கட்டப்பட்டு வந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது.
இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில், மீட்புப் பணி நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த மீட்புப் பணிக் குழுவினர் சிறப்பாக பணியாற்றினர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 2.45 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், மீட்புக் குழுவினருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மவுலிவாக்கத்தில் நிகழ்ந்த கட்டிட விபத்தில் 61 பேர் சடலமாகவும், 27 பேர் உயிருடனும் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.