

மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்: இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
‘லியோ’ அதிகாலை காட்சி விவகாரம்: அரசு விளக்கம்: லியோ திரைப்படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சியை திரையிட அனுமதி அளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் கர்னல் கணேசன் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு திங்கள்கிழமை ஆஜராகி அவசர முறையீடு செய்தார். அதில் லியோ படத்தின் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சியை காலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும். அதேபோல் காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இதையடுத்து நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ‘லியோ படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மேலும் ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டடுள்ளது’ என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அந்த வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டுவிட்டதா என்று கேள்வி எழுப்பி, அது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
குழந்தை விற்பனை விவகாரம்: அரசு பெண் மருத்துவர் கைது: குழந்தை விற்பனை விவகாரத்தில் திருச்செங்கோடு அரசு பெண் மகப்பேறு மருத்துவர் அனுராதா, புரோக்கர் லோகாம்பாள் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அரசு பெண் மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, குழந்தை விற்பனை விவகாரம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டார். அப்போது, அரசு மருத்துவமனையில் பணியாற்றுபவர்களுக்கும் குழந்தைகளை விற்பனை செய்யும் புரோக்கர்களுக்கும் என்ன தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும், பெண் மருத்துவர் அனுராதா மீது எடுக்கப்பட்டுள்ள குற்றவியல் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
“மணிப்பூரை விட இஸ்ரேல் மீதே பிரதமருக்கு அதிக அக்கறை” - ராகுல்: அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தை ராகுல் காந்தி எம்.பி. திங்கள்கிழமை நடைபயணத்துடன் தொடங்கினார். அப்போது, ‘மணிப்பூர் மாநிலத்தை விட இஸ்ரேல் மீதே பிரதமர் மோடிக்கு அதிக அக்கறை’ என்று அவர் பிரதமரை சாடினார்.
நிதாரி பாலியல் - கொலை வழக்கு குற்றவாளிகள் விடுவிப்பு: உத்தரப் பிரதேசத்தின் நொய்டா அருகே நிதாரியில் பாலியல் வன்கொடுமை மற்றும் தொடர் கொலை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் தொழிலதிபர் மொகிந்தர் சிங் பாந்தர் மற்றும் அவரது வீட்டு உதவியாளர் சுரேந்தர் கோலியை அலகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. முன்னதாக, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டில் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படிருந்தது குறிப்பிடத்தக்கது.
“காங்கிரஸால் கொள்ளை அடிக்க மட்டுமே வாக்குறுதி அளிக்க முடியும்”: காங்கிரஸ் கட்சியால் கொள்ளையடிக்க மட்டுமே வாக்குறுதி அளிக்க முடியும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சி ஊழல் மூலம் தேர்தலுக்கு நிதியளிக்கும் ஏடிஎம் இயந்திரமாக கர்நாடகாவை மாற்றியுள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பிணைக் கைதிகளை விடுவியுங்கள்: ஐ.நா: இஸ்ரேல் - ஹமாஸ் போர் 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், பதற்றத்தை தணிக்க ஹமாஸ் அமைப்பினர் எந்த வித நிபந்தனையுமின்றி பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதேபோல் இஸ்ரேல் மனிதாபிமான உதவிகள் காசா சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
இதனிடையே, காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைப்பது தவறு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
“இது பிசிசிஐ உலகக் கோப்பை போல் உள்ளது” - மிக்கி ஆர்தர்: “இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை 2023, ஐசிசி உலகக் கோப்பை போல் இல்லை. மாறாக பிசிசிஐ உலகக் கோப்பை போல் உள்ளது” என்று பாகிஸ்தான் அணி இயக்குநர் மிக்கி ஆர்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திங்கள்கிழமை நடந்த விசாரணையின்போது, “செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சிகளை அவர் கலைத்து விடுவார்" என்று வாதிட்டார் என்று அமலாக்கத் துறை சார்பில் வாதிட்டப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் உடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு: சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, இஸ்ரோ தலைவர் சோம்நாத் திங்கள்கிழமை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தூத்துக்குடி அருகே குலசேகரன்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அரசு 2000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் முழுவதுமே கையகப்படுத்தியாகிவிட்டது. அங்கிருந்து சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவுவது சிறந்ததாக இருக்கும்” என்று தெரிவித்தார்.