சோமலாபுரம் ஊராட்சியில் சிதிலமடைந்த நியாய விலை கடையை புனரமைக்க கோரும் மக்கள்

மாதனூர் ஒன்றியம், சோமலாபுரம் ஊராட்சியில் சிதிலமடைந்த நியாய விலை கடையின் தற்போதைய தோற்றம்.
மாதனூர் ஒன்றியம், சோமலாபுரம் ஊராட்சியில் சிதிலமடைந்த நியாய விலை கடையின் தற்போதைய தோற்றம்.
Updated on
1 min read

மாதனூர்: மாதனூர் அருகே சிதிலமடைந்து பயன்பாடு இல்லாமல் இருக்கும் முழு நேர நியாய விலை கடையை புனரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சோமலாபுரம் ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு முழு நேர நியாயவிலை கடை திறக்கப்பட்டது. கொம்மேஸ்வரம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இந்த நியாய விலை கடை செயல்பட்டு வந்தது.

சோமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சோமலாபுரம், வீரராகவபுரம், அசோக்நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இந்த கடையில் உணவுப் பொருட்களை பெற்று வந்தனர். இந்நிலையில், கட்டிடம் பழுதடைந்து, மேற்கூரை பெயர்ந்து விழத் தொடங்கியதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அருகாமையில் உள்ள சமுதாய கூடத்தில் நியாய விலை கடை இடமாற்றம் செய்யப்பட்டது.

இருப்பினும், முழு நேர நியாய விலை கடை கட்டிடத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதற்கான நடவடிக்கை 7 ஆண்டுகளாக தொடங்காததால், பழுதடைந்த நியாய விலை கடை தற்போது மாட்டுத் தொழுவாக மாறியுள்ளது. முட்புதர்களால் சூழந்து, அந்த இடமே, மயானம் போல உள்ளது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவர், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘ சோமலாபுரம் ஊராட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த நியாய விலை கடை தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. கட்டிடம் பழுதடைந்து இருப்பதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்களது மாடுகளை நியாய விலை கடையில் கட்டி வைத்து அதை மாட்டு தொழுவமாகவே மாற்றிவிட்டனர்.

நியாயவிலை கடையை சுற்றிலும் முட்புதர்கள் மண்டியிருப்பதால் பாம்புகள் படையெடுப்பு அதிகமாக உள்ளது. விஷப் பூச்சிகளும், அட்டைப் பூச்சிகளும் அதிகம் காணப்படுகின்றன. இருள் சூழ்ந்த இடமாக இருப்பதால் இரவு நேரங்களில் சமூக விரோத கும்பல் அங்கு ஒன்று கூடி தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, பழுதடைந்த நியாய விலை கடையை சீரமைக்க ஒன்றிய அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் பயன் இல்லை.

எனவே, பழுதடைந்த நியாயவிலை கடையை புனரமைக்க வேண்டும். சமுதாய கூடத்தில் இயங்கி வரும் நியாய விலை கடையை புதிய கட்டிடத்தில் இடமாற்றம் செய்து தர வேண்டும் என்பதே எங்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது’’ என்றார்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சோமலாபுரம் ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையை புனரமைக்க ஏற்கெனவே ஆய்வு நடத்தியுள்ளோம். ஒரு சில காரணங்களால் இந்த பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில், அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in